பழனி கோவில் 100 கோடி நிலம்.. ஒரே நாளில் 2 கோடிக்கு விற்றதாக காட்டி மோசடி! சார் பதிவாளர் சஸ்பெண்ட்

  • திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, போலியான ஆவணங்கள் மூலம் தனிநபர்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியெடுத்து விட்டது.. இந்த மோசடி விவகாரத்தில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். என்னதான் நடந்தது?

    Advertisement

    பழனி அடிவாரப் பகுதியில் சுமார் 1.40 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது.. பல வருடங்களுக்கு முன்பே அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்தின் பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக இந்த நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.. எனவே இது புனிதமான சொத்தாக கருதப்படுகிறது.

    Advertisement

    பழனி முருகன் கோவில் - ரூ.100 கோடி

    பழனி முருகன் கோவில் நிர்வாகம், 2025 செப்டம்பரில் மடத்திற்குச் சொந்தமான இந்த நிலத்தைக் கையகப்படுத்தியது.. கடந்த 1888-ம் ஆண்டு அறக்கட்டளைப் பத்திரத்தின்படி, இந்த நிலத்தை விற்பனை செய்யவோ அல்லது எந்தவிதமான மாற்றங்களுக்கு உட்படுத்தவோ கூடாது என்பது மிகத் தெளிவான விதியாகும். இப்போது பக்தர்களின் வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த நிலம், சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தாகவும் கருதப்படுகிறது.

    இந்த அளவுக்கு மதிப்புமிக்க நிலத்தை, தனிநபர்கள் சிலர் சட்டத்தையும் நீதிமன்ற உத்தரவுகளையும் காற்றில் பறக்கவிட்டு, முறைகேடாகத் தங்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்..

    Advertisement

    2 கோடி ரூபாய் - போலி ஆவணம்

    இந்த நிலம் மடத்திற்கு சொந்தமானது என்பதையும், இது ஒரு தனியார் சொத்து அல்ல என்பதையும் ஹைகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பல்வேறு தருணங்களில் உறுதிப்படுத்தியுள்ளன. இருந்தாலும் உச்சகட்ட துணிச்சலுடன், 2 கோடி ரூபாய்க்குத் தாரை வார்த்தது போன்ற போலி ஆவணங்களைத தயார் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த மோசடியில் அதிர்ச்சி என்னவென்றால், கொடைக்கானல் பத்திரப்பதிவு ஆபீசில் பணிபுரியும் ஜஸ்டின் மணிகண்டன், பழனி சார்பதிவாளராக பொறுப்பேற்ற ஒரே நாளில் இந்த முறைகேட்டை செய்துள்ளது அம்பலமாகி உள்ளது..

    Advertisement

    சார் பதிவாளர் சஸ்பெண்ட்

    கோவில் நிர்வாகத்தின் புகார் மற்றும் பக்தர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் விக்னேஷ் இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், நிலம் கிரையம் பெற்றதாகக் காட்டப்பட்ட வெள்ளைத்துரை மற்றும் சேதுபதி ஆகிய 4 பேர் மீது மோசடி, ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    முதற்கட்ட விசாரணையில் பத்திரப்பதிவு மோசடி உறுதியான நிலையில், குற்றச்சாட்டிற்கு உள்ளான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஒரு நாள் மட்டும் முறைகேடு

    பழனி முருகன் கோவில் சொத்துக்களை பாதுகாப்பதில் நிலவும் மெத்தனப்போக்கும், அதிகார வர்க்கத்தின் துணையோடு அரங்கேறும் இதுபோன்ற நில அபகரிப்புகளும் பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட இந்தப் பத்திரப்பதிவை முழுமையாக ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரியும் ஜஸ்டின் மணிகண்டன்; ஒரு நாள் மட்டும் பழனியில் பணிபுரிந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

    English Summary

    Palani Temple ₹100 Crore Land Shown as Sold for ₹2 Crore in a Day! Sub-Registrar Suspended