பழனி கோவில் நிலம்.. பத்திரப்பதிவின் மர்மங்களை உடைத்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

  • திண்டுக்கல்: பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் உத்தரவு பெற்றிருந்தார்கள். அதனை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டிருந்தது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், " பழனி அடிவாரம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான நிலத்தை தங்கள் பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டி, கடந்த ஏப்ரல் மாதம் சில தனி நபர்கள் மாண்பமை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், ஏற்கனவே இந்த நிலம் தொடர்பாக உள்ள வழக்குகளை மறைத்து, தக்காரை வழக்கில் சேர்க்காமல் தனி நீதிபதியிடம் பெற்ற உத்தரவுக்கு எதிராக, கடந்த ஜூன் 30 அன்று அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடம் சார்பில் பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் மேல்முறையீட்டு மனுவை (WA(MD)1010/2026) தாக்கல் செய்திருந்தோம்.

    Advertisement

    மேலும் இந்த மடத்தின் நிலத்தை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று இந்த வழக்குகளை மேற்கோள் காட்டி, கடந்த ஜூலை 2ஆம் தேதியன்று பழனி திருக்கோயில் இணை ஆணையர் மூலம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டது.

    இந்த சூழலில் கடந்த ஜூலை 6ஆம் தேதியன்று நீதிமன்ற வழக்கு மற்றும் இணை ஆணையர் கடிதத்தையும் பரிசீலனை செய்யாமல் நிலம் தனியாருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்ட தகவல் கிடைத்த உடன் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் சார் பதிவாளர் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டு, துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவியல் விசாரணை நடந்து வருகிறது.

    Advertisement

    இந்நிலையில் இன்று மாண்பமை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரித்ததில்,
    மடத்தின் நிலமானது முறைகேடாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதை மாண்புமிகு நீதியரசர்கள் உறுதி செய்து பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளனர்.

    மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    அரசின் மீதும், என் மீதும் சில தீய சக்திகள் எப்படியெல்லாம் பொய் கதைகளை பரப்ப முயற்சித்தாலும் அதையல்லாம் தாண்டி, உண்மையை நிலைநாட்டி
    திருக்கோயில் நிலங்களை பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்களின் தலைமையிலான அரசு என்றும் உறுதியாக நிற்கும்" இவ்வாறு கூறியுள்ளார்.

    Advertisement

    முன்னதாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கெனவே உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கோயிலின் தக்கார் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை.

    இருப்பினும் கோயில் நிலத்தை பதிவு செய்ய தனி நீதிபதி அனுமதி வழங்கியிருக்கிறார். இது சட்டவிரோதமானது. எனவே பழநி தண்டாயுதபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

    Advertisement

    தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயில் நிர்வாகத்தை எதிர்மனுதாரராக சேர்க்காமலேயே மனு தாக்கல் செய்யப்பட்டு உத்தரவு பெறப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. அரசுத் தரப்பில் வாதிடும் போது, நீதிமன்றத்தில் முழு விவரங்களையும் தெரிவிக்காமல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
    இதனால் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் பதிவுத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் நிலத்தை பதிவு செய்ய சார் பதிவாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் வழக்கமான சார் பதிவாளர் விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டு முறைகேடாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

    Advertisement

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "குறிப்பிட்ட நிலத்தை பதிவு செய்வதற்கு முன்பு கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்டிருக்க வேண்டும். அதன் பிறகே பதிவுக்கு அனுமதி கோரியிருக்க வேண்டும். சொத்து தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா? என்பதை சார் பதிவாளர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தனி நீதிபதியிடம் தெரிவித்து இருக்க வேண்டும். இவற்றை மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் உத்தரவு பெற்றுள்ளார்கள். முறையான நபர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்காமல், முழு விபரங்களை தெரிவிக்காமல் தனி நீதிபதி முன்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    தொடர்ந்து பழனி கோயில் நிர்வாகத்துக்கு தகவல் அளிக்காமல், நோட்டீஸ் அனுப்பி கருத்து கேட்காமல் சார் பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார். இதனால் இந்த பத்திரப்பதிவு செல்லாது. முழு தகவல்களையும் தெரிவிக்காமல் உயர்நீதிமன்ற தனி நீதிபதியை தவறாக வழிநடத்தியுள்ளனர். எனவே தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் பழநி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது என அறிவிக்கப்படுகிறது. வழக்கு முடிக்கப்படுகிறது." இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

    English Summary

    Palani Temple Land : Hindu Religious and Charitable Endowments Minister Ramesh has unravelled the mysteries surrounding the land registration of the Palani Dandayuthapani Temple in Dindigul district.