2 பதிவாளர் நோ சொன்ன பின்.. 3வதாக ஒருவரை கூட்டி வந்து ரிஜிஸ்டர் பண்ணி இருக்காங்க.. பழனி நில மோசடி!


  • பழனி: பழனி முருகன் திருக்கோயில் மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள, சுமார் ₹100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் தனியார் நபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரம், தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதில் திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    Advertisement

    இந்த விவகாரம் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்கை சிபிசிஐடி தன் கைகளில் எடுத்து விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

    Advertisement

    இந்நிலையில், இந்த நில மோசடியில் மிகப்பெரிய அளவில் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகத் திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பு பேட்டி

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக இணைச் செயலாளர் பரந்தாமன், பழனி நில மோசடி வழக்கில் அரங்கேறியுள்ள திட்டமிட்ட சதிகளை அடுக்கினார்.

    அதில், பழனியில் உள்ள ₹100 கோடி மதிப்பிலான கோயில் நிலத்தை வெறும் ₹2 கோடிக்குத் தனியார் நபர்களுக்குப் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர். இந்த ஆவணத்தைப் பதிவு செய்வதற்காக அதிகாரிகள் மட்டத்தில் மிகத் துல்லியமான சதி அரங்கேறியுள்ளது என்பது அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

    Advertisement

    அதிகாரிகள் மறுப்பும்.. கொடைக்கானல் செட்டிங்கும்

    இந்த நிலத்தை எப்படியாவது தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று ஒரு தரப்பு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுள்ளது. முதலில் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்த சார்பதிவாளர் பழனிச்சாமி என்பவர், இந்தத் தவறான ஆவணங்களைப் பார்த்துவிட்டு நிலத்தைப் பதிவு செய்ய மறுத்துவிட்டார்.

    அதன் பின்னர், ஜூலை 3ஆம் தேதி பாலசுந்தரம் என்ற அதிகாரி பொறுப்புக்கு வருகிறார். அவரும் இந்த வில்லங்கமான ஆவணங்களை முழுமையாகப் பரிசீலித்துவிட்டு, 'நான் இந்த நிலத்தைப் பதிவு செய்ய மாட்டேன்' என்று கறாராக மறுத்துவிடுகிறார்.

    இப்படி அடுத்தடுத்து அதிகாரிகள் மறுத்த நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களைக் கடந்து, திங்கட்கிழமை ஒரு புதிய சார்பதிவாளர் கொண்டு வரப்படுகிறார். சுற்றியுள்ள பக்கத்து ஊர்களில் இருந்தோ அல்லது திண்டுக்கல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தோ அதிகாரிகளை நியமிக்காமல், சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளர் அவசர அவசரமாகப் பழனிக்குக் கொண்டு வரப்படுகிறார்.

    Advertisement

    நிலத்தைப் பதிய வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே, இந்தச் செட்டிங் செய்யப்பட்டு அவர் கொண்டு வரப்பட்டார் என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது" என்று குற்றம்சாட்டினார்.

    அமைச்சர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

    இந்த விவகாரத்தில் தமிழக அரசின் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், 'எல்லாமே நீதிமன்ற நடைமுறைகளின்படிதான் சட்டப்பூர்வமாக நடைபெற்றது' என்கிறார். அதே நேரத்தில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரோ, 'அறியாமையால் நடந்த ஒரு சிறு தவறு' என்று மழுப்பலாகக் கூறுகிறார்.

    அமைச்சர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்க, இந்த வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்திலேயே அரசு தரப்பு வழக்கறிஞர், 'சார்பதிவாளருக்கு மேல் மட்டத்தில் இருந்து கொடுக்கப்பட்ட கடுமையான அழுத்தம் காரணமாகவே இந்தப் பதிவு நடத்தப்பட்டது' என்று மிகத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    Advertisement

    அரசு வழக்கறிஞரே அழுத்தம் கொடுக்கப்பட்டது என்று ஒப்புக்கொண்ட பிறகு, இதில் மிகப்பெரிய முறைகேடும் அதிகார துஷ்பிரயோகமும் நடந்துள்ளது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?" என்று பரந்தாமன் கேள்வி எழுப்பினார்.

    இந்த ₹100 கோடி நில மோசடி விவகாரத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளையும், அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல் புள்ளிகளையும் சிபிசிஐடி போலீசார் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தற்போது இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    English Summary

    Palani Temple Land Scam: DMK Legal Wing Leader Paranthaman asks major question