திண்டுக்கல்: அமைச்சர் பதவி கேட்பதால் தவெக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கி சமாதானப்படுத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், தவெக ஆட்சியின் 100 நாட்களில் ரூ 22 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.
தற்போது வாங்குவது போல் முதல்வர் விஜய் கடன் வாங்கினால் 5 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இதைத்தான் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தெரிவித்திருந்தார். 717 மதுபான கடைகள் மூடியதாக கூறிவிட்டு ரூ 51 ஆயிரம் கோடியிலிருந்து 56 ஆயிரம் கோடியாக வருவாயை உயர்த்துவோம் என்கிறார்கள். எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால் மக்களுக்கு சோறு இல்லாத போது கார் எதற்கு? விவசாயிகளின் பயிர்க்கடனை விஜய் தள்ளுபடி செய்திருக்க வேண்டும். விவசாயிகள் கஷ்டப்படும் போது எம்எல்ஏக்களுக்கு எதற்கு கார்? விஜய் ஏன் கார் கொடுக்கிறார் என்றால் தவெக எம்எல்ஏக்கள் எல்லாம் அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதனால் அவர்களின் வாயை அடைக்கத்தான் விஜய் கார் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். தனது மேஜையில் 3 ஊழல் கோப்புகள் இருப்பதாக சொல்கிறார் முதல்வர். அதை திறக்க வைத்துவிடாதீர்கள் என அவர் கூறுவது, "நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்னை தட்டி எழுப்பிவிடாதீர்கள்" என சொல்வதை போல் உள்ளது. ஊழல் நடந்திருப்பது அரசின் கவனத்திற்கு வந்தால் உடனே துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே! அவர் ஊழலுக்கு எதிரானவர் என அவர் எடுக்கும் நடவடிக்கை மூலம் பொதுமக்களுக்கு உணர்த்த வேண்டியதுதானே! கடன் வாங்காமல் ரூ 2500 மகளிர் உரிமைத் தொகையை தமிழக மக்களுக்கு முதல்வர் விஜய் தந்துவிட்டார் என்றால் அவர் திறமைசாலி முதல்வர் என நான் ஏற்றுக் கொள்கிறேன். அப்படி அவரால் ரூ 2500 கொடுக்க முடியாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி சட்டசபையில் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். அதில் "நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து நான் சட்டசபைக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி, வாகனம் கிடையாது. வாடகை வண்டியில்தான் வருகிறேன். செருப்பு வாங்கக் கூட வழியில்லாத எளிய பின்னணியில் இருக்கிறேன். தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. ஒரு செயலாளரை உடன் வைத்துக் கொண்டு ஊதியம் கொடுக்கவும் வசதி இல்லை. இப்படித்தான் முக்கால்வாசி சட்டசபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வாகன வசதியும் மற்ற வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படி ரூ 75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.