வெற்றிப்பயணம் திட்டத்தால் வியாபாரிகளுக்கு பெரிய சிக்கல்.. உள்ளுர் சந்தை முடங்கலாம்.. நெட்டிசன் பதிவு

  • திண்டுக்கல்:'வெற்றிப்பயணம்' திட்டம் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகைக்கார் ஓட்டுநர்கள், தனியார்ப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போகுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், பெரும்பாலான அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணிக்க முடியும் என்கிற நிலை உருவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தால் அடுத்த பெரிய சிக்கல் வணிகர்களுக்கும் காத்துக்கொண்டிருக்கிறது. "பேருந்துகளில் கட்டணமே இல்லை என்றால், பொருட்கள் எங்கு விலை குறைவாகக் கிடைக்குமோ அந்த நகரத்திற்கே மக்கள் இனி பயணிப்பார்கள்" என்று நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.

    Advertisement

    முதல் நெட்டிசன் தனது பதிவில், "இன்னொரு பெரிய சிக்கல் இனி வருங்காலத்தில் வரவிருக்கிறது. உதாரணமாக, சிவகங்கைக்கும் மதுரைக்கும் இடையிலான தொலைவு 40 கி.மீ. மதுரை மொத்த விற்பனைக் கடைகளில் (Wholesale Market) சிவகங்கையை விடப் பொருட்களின் விலை குறைவாக இருக்கும். இத்தனை நாட்களாகப் பேருந்துக் கட்டணம் காரணமாகச் சிவகங்கையிலேயே பொருட்கள் வாங்கிய பெண்கள், 'இலவசப் பயணம் தானே' என மதுரை வரை சென்று பொருட்கள் வாங்குவார்கள். தாம்பரத்தில் வாங்க வேண்டிய பொருட்களைப் பிராட்வே சென்றும், வள்ளியூரில் வாங்க வேண்டிய பொருட்களைத் திருநெல்வேலி சென்றும் வாங்குவார்கள். இதனால் உள்ளூர் வியாபாரம் பெருத்த அடி வாங்கும்" என்று கூறியுள்ளார்.

    Advertisement


    இரண்டாவது நெட்டிசன் கூறுகையில், "'வெற்றிப்பயணம்' திட்டம் காரணமாக நகர்ப்புறப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாப் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் அப்பேருந்துகளில் அளவுக்கு அதிகமான கூட்டம் சேர்கிறது. இதன் காரணமாகக் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் ஆண்கள், முதியோர்கள் மற்றும் அவசரமாகச் செல்ல வேண்டியவர்கள் அரசுப் பேருந்துகளைத் தவிர்த்துப் பிற பேருந்துகள் மற்றும் மாற்று வாகனங்களில் பயணிக்கத் தொடங்குகின்றனர். இதனால் அரசுப் பேருந்துகளின் பயன்பாடு அதிகரித்து, தேய்மானம் அடைந்து விரைவில் பழுது ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு வழங்கும் மானியத் தொகை உரிய நேரத்தில் போக்குவரத்துக் கழகங்களுக்குக் கிடைக்காமல் போனால் பெரிய நிதிச் சுமை ஏற்படும். இத்திட்டத்திற்காக ஆண்டுக்கு ₹6,000 கோடியை அரசு ஒதுக்க வேண்டும். இந்தத் தொகையைக் கொடுக்க அரசு தாமதித்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் திவாலாகும் அபாயமும் இருக்கிறது" என்றார்.

    Advertisement
    10 ரூபாய்க்கு டிக்கெட் போட்டால் கூட யாரும் ஏறுவதில்லை.. வெற்றிப்பயணத்தால் கலங்கும் ஆட்டோ டிரைவர்கள்

    மூன்றாவது நெட்டிசன் கூறுகையில், "இனி கிராமப்புறங்களில் உள்ள சிறிய தையல்கடைகள், சிறிய துணிக்கடைகள், மளிகைக் கடைகள் போன்றவற்றுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். ஏனெனில், அவர்கள் பேருந்துக் கட்டணத்திற்கு அஞ்சியே வெளியூர் செல்லத் தயங்கினார்கள். இப்போது பேருந்துகளில் கட்டணமே இல்லை என்கிற போது, சிறிய கடைகளும் சிறு வணிகர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அதேநேரம் பெரிய நகரங்களில் உள்ள பெரு வணிகர்களுக்கே இத்திட்டம் லாபமாக மாறும். சிறிய ஊர்களில் உள்ள சில்லறை வணிகர்கள் கடைகளை மூடும் நிலை வரலாம்" என்றார்.

    Advertisement

    நான்காவது நெட்டிசன் கூறுகையில், "மிகக் குறைந்த தூரப் பயணங்களுக்குக்கூடப் பெண்கள் ஆட்டோக்களைத் தவிர்த்துப் பேருந்துகளில் ஏறிவிடுகிறார்கள். இதனால் ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் வெகுவாகக் குறைகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட அவர்கள் ஆட்டோக் கட்டணத்தை உயர்த்த வாய்ப்புள்ளது. இது ஆட்டோவையே முழுமையாக நம்பியிருப்போருக்குப் பெரிய சிக்கலாக மாறும்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

    முதலமைச்சர் விஜய் டீ குடித்த டம்ளரை பூஜை அறையில் வைத்துள்ளேன்.. டீக்கடைக்காரர் பேட்டி

    ஐந்தாவது நெட்டிசன் கூறுகையில், "நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பாதைகளில் இயங்கும் தனியார்ப் பேருந்துகளில் போதிய கூட்டமில்லாமல், தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் பேருந்து உரிமையாளர்கள் சேவைகளை நிறுத்தும் சூழ்நிலையும் உருவாகும்" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஆறாவது நெட்டிசன் கூறுகையில், "அரசுக்கு வரும் வரி வருவாயில் பெரும்பகுதி அண்ணன் சீர், மகளிர் உரிமைத் தொகை, வெற்றிப்பயணம், தாய்மாமன் தங்க மோதிரம் போன்ற திட்டங்களுக்கும் மானியங்களுக்கும் சென்றுவிடும். அதேபோல் கடனுக்கான வட்டி செலுத்துவதற்கும், அரசு ஊழியர்களின் சம்பளத்திற்கும் போய்ப் பாழாகிவிடும். நிலைமை இப்படியிருக்க, புதிய பாலங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற நீண்டகால உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒதுக்க அரசிடம் பணமே இருக்காது. இதனால் உள்கட்டமைப்பு வளராமல் போகும்; புதிய முதலீடுகள் வராது; இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் உருவாகாமல் போகும் ஆபத்து உள்ளது" என்று எச்சரித்துள்ளார்.

    English Summary

    The 'Victory Journey' (Vetri Payanam ) scheme holds another major challenge in store for traders. A netizen has remarked that if bus travel is free, people will henceforth travel to whichever city offers lower prices.