திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்ட மோகன் என்பவர், சக நிர்வாகியுடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ வெளியாகித் தவெக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்சிக்கு உழைத்த உண்மையான தொண்டர்களைப் புறக்கணித்துவிட்டுப் பணம் பார்க்கும் துரோகிகள் குறித்து தன்னிடம் 40 வீடியோ ஆதாரங்கள் உள்ளதாகவும், அவர்கள் தன்னிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்காவிட்டால் தலைமைக்கும் பொதுவெளியிலும் ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும் அவர் அந்த ஆடியோவில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்டவர் மோகன். இவர் கட்சியில் உள்ள சில முக்கியப் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது பகிரங்கமாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சக நிர்வாகி மதனுடன் தொலைபேசியில் ஆவேசமாகப் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ ஒன்று தற்போது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆடியோ உரையாடலில், "கட்சிக்காக ஆரம்பக் காலம் முதல் உழைத்த தம்பிகள், தோழர்கள் மற்றும் உண்மையான நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டு, புதிய நபர்களிடம் பணம் பார்த்துக்கொண்டு கட்சிக்குத் துரோகம் செய்கிறார்கள். அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்துத் தேர்தலில் நின்ற போது, தேர்தல் பிரச்சாரத்திற்கு உரிய அனுமதி பெற்றுத் தராமல் பிரச்சாரத்தை ரத்து செய்ய வைத்து என்னைத் திட்டமிட்டுத் தோற்கடித்தனர். மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள் தொப்பம்பட்டியில் வீடு பிடித்துக் கொடுத்தது முதல் ஃபர்னிச்சர் வாங்கியது வரை மறைமுகமாகக் கையூட்டு பெற்றதற்கான ஆவணங்கள் மற்றும் சில நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்த 40 வீடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஒட்டன்சத்திரம் தொகுதி விவகாரங்கள் குறித்துத் தனி ஆவணக் கோப்புகளே தயாராக வைத்திருக்கிறேன்" என்று மோகன் ஆவேசமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "கட்சித் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஆகியோரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இந்தத் துரோகிகள், இன்னும் ஓரிரு நாட்களில் தங்கள் தவறுகளை உணர்ந்து நேரில் வந்து தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், கட்சியைக் காப்பாற்ற இந்த ஆதாரங்கள் அனைத்தையும் தலைமைக்கும் ஊடகங்களுக்கும் முழுமையாக வெளியிட்டு அம்பலப்படுத்துவேன்" என எச்சரித்துள்ளார். மேலும், போட்டியிட்ட போது தனக்கு ஆதரவாக தவெக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன், ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் அருண், ஒன்றிய செயலாளர் சுறா சுரேஷ் மற்றும் தொப்பம்பட்டி மத்திய ஒன்றியம் ஜின்னா செயல்படாமல் தனக்கு எதிராக போட்டியிட்டவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தேர்தல் வேலைகளை செய்யாமல் வெற்றி பெற வேண்டிய தன்னை தோற்கடித்து விட்டார்கள் எனவும் அந்த ஆடியோவில் பேசியுள்ளார். குறிப்பாக், சுறா சுரேஷ் முன்னால் அமைச்சர் சக்கரபாணியிடம் பணம் வாங்குவது குறித்து பேசும் வீடியோ, நகர செயலாளர் மின்னல் அருண்பாண்டியின் காமவெறி கலியாட்ட வீடியோக்கள், மாவட்ட செயலாளரின் லஞ்ச அணுகுமுறைகள், மறைமுகமாக லஞ்சம் வாங்கும் லிஸ்ட் உள்ளிட்ட ஆதாரம் தன்னிடம் உள்ளது. அனைவரும் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் வீடியோக்கள் ரிலீஸ் ஆகும்" என்றும் எச்சரித்துள்ளார். ஒட்டன்சத்திரம் தவெக வேட்பாளரே தனது கட்சி நிர்வாகிகள் மீது இத்தகைய கடுமையான ஊழல் மற்றும் உள்ளடி வேலைகள் தொடர்பான புகார்களை ஆடியோவில் முன்வைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.