நீங்க ஒருத்தரை மட்டும் குறி வைக்கிறீங்க? பழனி நில வழக்கு! தமிழக அரசிடம் சரமாரியாக கேள்வி கேட்ட கோர்ட்!

  • பழனி: பழனி கோவில் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளது.

    Advertisement

    பழனி கோவில் மடத்திற்குச் சொந்தமான ₹100 கோடி மதிப்புள்ள நில மோசடி விவகாரம், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.

    Advertisement

    கொடைக்கானலில் இருந்து 60 கிமீ தூரம் பயணித்து வந்து, ஒரே நாளில் பத்திரப்பதிவை முடித்துக் கொடுத்த பொறுப்பு சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்த முன்ஜாமீன் மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

    இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட நீதிபதி ராஜசேகர், இந்த விவகாரத்தில் காவல்துறையும் பத்திரப்பதிவுத் துறையும் காட்டும் ஒருதலைப்பட்சமான போக்கை சுட்டிக்காட்டி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    நீதிபதியின் கிடுக்கிப்பிடி கேள்வி!

    வழக்கின் விசாரணையின் போது, ஜஸ்டின் மணிகண்டன் தரப்பில், ஜூலை 3-ஆம் தேதியே வழக்கமான சார்பதிவாளர் பாலச்சந்தர் என்பவர் இந்தப் பத்திரப்பதிவைத் தொடங்கிவிட்டார்; ஆனால் அரசு தன்னை மட்டும் பலிகடா ஆக்குகிறது என்ற பகீர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு அரசுத் தரப்பு, 3-ஆம் தேதி டேட்டா என்ட்ரி மட்டுமே செய்யப்பட்டது, ஜஸ்டின்தான் முறைப்படி முடித்தார் என வாதாடியது.

    Advertisement

    வாதங்களைக் கேட்டு அதிருப்தியடைந்த நீதிபதி, காவல்துறை போலீஸ் மற்றும் தமிழக அரசின் பாரபட்சத்தை கடுமையாக விமர்சனம்செய்தார் .

    ஜூலை 3-ஆம் தேதியே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது என்றால், ஏற்கனவே அந்தப் பத்திரப்பதிவை முன்னெடுத்த முந்தைய சார்பதிவாளர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? தவறு நடந்திருப்பது உறுதியானால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய இரு சார்பதிவாளர்கள் மீதும் அல்லவா காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? ஏன் ஒருவரை மட்டும் குறிவைக்கிறீர்கள்?

    இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை, என்றும் நீதிபதி பகிரங்கமாகத் தெரிவித்தார்.

    சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு

    இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் யார் யார், இதன் பின்னணியில் இருக்கும் நெட்வொர்க் என்ன என்பதை சிபிசிஐடி போலீசார் மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில்.. அந்த இன்னொரு சார் பதிவாளர் தவறு செய்ததாக தெரிந்தால் அவர் மீதும் ஆக்சன் எடுக்கப்படும் என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

    Advertisement

    நிபந்தனை முன்ஜாமீன்

    இதில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்குவதாக அறிவித்த நீதிபதி.. அவர் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையையும் விதித்தார்.

    English Summary

    What did High Court ask Tamil Nadu govt in the Palani Land Scam?