கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாரதி அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது ஓராவி அருவி. இது அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த அருவியை இன்ஸ்டாகிராமில் பார்த்து தேனிலவு தம்பதியை அழைத்து சென்ற சென்னை ஐடி ஊழியருக்கு என்ன நடந்தது? அந்த தம்பதி கண் முன்னே ஐடி ஊழியரின் தவறான ஆர்வம் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை பார்ப்போம்.
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கு அண்மையில் திருமணம் நடந்தது. தேன்நிலவை கொண்டாட தனது மனைவியுடன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். அங்கு போகும் வழியில் சிறுமலையை சுற்றி சென்றதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த விக்னேஷின் நண்பர் சென்னை தாவங்கரையை சேர்ந்த ஐ.டி., நிறுவன ஊழியரான 27 வயதாகும் திருநேசன் விக்னேஷை அழைத்துள்ளார். அவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பார்த்த கொடைக்கானலில் பார்த்த பலருக்கும் தெரியாத சுற்றுலா தலங்களுக்கு சென்று வந்தவர் ஆவார். அந்த நம்பிக்கையில் தனக்கு நன்றாக தெரிந்த அற்புதமான அருவிகள் மற்றும் யாருக்கும் தெரியாத சுற்றுலா தலங்களை காண்பிப்பதாக விக்னேஷிடம் கூறினாராம் திருநேசன்.
இதை சனிக்கிழமை திருநேசன் கூறிய நிலையில், மறுநாள் ஞாயிறு விடுமுறை என்பதால், திருநேசன் கொடைக்கானலுக்கு பேருந்தில் சென்றுள்ளார். காலையில் அவர்கள் பாரதி அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். பின்னர் நேற்று பகல் நேரத்தில் ஓரவி அருவிக்கு சென்று குளிக்க போயிருக்கிறார்கள். அருவியில் குளிக்க விக்னேஷ் மற்றும் அவரது மனைவி தயங்கி நிலையில், திருநேசன் ஆசையுடன் குளிக்க உள்ளே குதித்துள்ளார். அவர் அந்த அருவியை பற்றி முழுமையாக தெரியாமல் உள்ளே குதித்த நிலையில், ஜாலியாக குளித்தவர், திடீரென தாடகம் பகுதியில் உள்ள சுழலில் சிக்கிக்கொண்டார். சுழலில் சிக்கி பாறைக்குள் மாட்டிக்கொண்ட அவரை விக்னேஷ் தம்பதியில் மீட்க முடியவில்லை.. உதவிக்கு அழைக்க அங்கிருந்தவர்களிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் தடாகம் சூழலில் நீச்சலிடித்து வெளியே வரும் அளவிற்கு அனுபவம் உள்ளவர்கள் அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை. அங்கிருந்தவர்களில் நீச்சலித்து பார்த்தும் ஐடி ஊழியர் சிக்கிய இடத்திற்கு போக முடியவில்லை.. இதையடுத்து காவல்துறைக்கு விக்னேஷ் தம்பதி தகவல் தெரிவித்தனர். அவர்கள் கொடைக்கானல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். இதையடுத்து அந்த பொதுமக்களும் அங்கு ஓடி வந்தனர். அவர்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அருவி நீரில் இறங்கி தேடினர். பின்னர் சுமார் 1 மணி நேரம் போராடி பாறைக்கு அடியில் சிக்கிக்கிடந்த திருநேசனின் உடலை மீட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே அருவியில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். அதன்பின்பு அருவியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த பணிகள் நடைபெறாததால் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் சென்று குளித்து வருகின்றனர். பேத்துப்பாறையில் உள்ள இந்த ஐந்தருவி, ஓராவி அருவியில் குளிக்க சென்று நீரில் மூழ்கி இறப்பது தொடர்கதையாகவே இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பார்த்து ஆர்வமிகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் தான் இப்படி சுழலில் சிக்கி இறக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.