100 கோடி.. பரபரப்பை கிளப்பிய பழனி கோவில் நிலம்! 200 வருட வரலாறு! யார் இந்த குப்புசாமி மணியக்காரர்?

  • திண்டுக்கல்: பழனி அடிவாரத்தில், தனியாருக்கு சொந்தமாக இருந்து கோவில் நிர்வாகத்தால் பராமரிப்பில் தற்பொழுது இலவச வாகன நிறுத்துமிடமாக உள்ள 100 கோடி மதிப்பிலான மடத்தின் நிலம் தனிநபர்கள் இருவருக்கு சட்டவிரோதமாக கோவில் நிர்வாகத்திற்கே தெரியாமல் 2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் புகாரின் அறிக்கை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், குறிப்பிட்ட அந்த நிலம் கோவிலுக்கு கொடுக்கப்பட்டது எப்படி? என்பது பலருக்கும் தெரியாது.

    Advertisement

    ​திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் அமைந்துள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலமானது, கடந்த 1888 ம் ஆண்டில் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த குப்புச்சாமி மணியகாரர் என்பவரால் தண்டபாணி சுவாமி கோயிலுக்கு மடம் கட்டவும், இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும் தர்ம சாசனமாக வழங்கப்பட்டது.

    Advertisement

    இந்தத் தர்ம சாசன விதிகளின்படி, இந்த நிலத்தை எவருக்கும் விற்பனை செய்யவோ அல்லது வில்லங்கப்படுத்தவோ உரிமை கிடையாது. இது முழுக்க முழுக்கப் பொது அறக்கட்டளை சொத்தாகும். ஆனால் சிலர் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதும்,நீதிமன்றத்தில் வழக்குகள் நடப்பதும் வாடிக்கையாகி இருந்து வந்தது.

    இந்த நிலையில் இதனைப் பாதுகாக்கும் பொருட்டுப் பழனி கோயில் நிர்வாகம் கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்தி, தற்பொழுது பக்தர்களின் பயன்பாட்டிற்காகக் 'கட்டணமில்லா இலவச வாகன நிறுத்துமிடமாக' மாற்றிப் பராமரித்து வருகிறது. இச்சொத்தைத் தனி நபர்கள் பாராதீனம் செய்ய இயலாது எனவும், இந்த நிலத்திற்குப் பழனி கோயில் இணை ஆணையரே தக்காராக (நிர்வாகி) நீடிப்பார் என்றும் பழனி முதன்மைச் சார்பு நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை ஏற்கனவே தங்களது தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்திருந்தன.

    Advertisement

    ​இத்தகைய கடுமையான சட்டப்பாதுகாப்பு மற்றும் கோயில் நிர்வாகத்தின் தொடர் எழுத்துப்பூர்வ ஆட்சேபனைகளையும் மீறி, கடந்த ஜூலை 6-ஆம் தேதி, தனிநபர்கள் இருவரது பெயரில் இந்த 1.4 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி இணை சார்பதிவாளர் பணி மாறுதலில் சென்ற நிலையில், அந்தப் பதவிக்குக் கூடுதல் பொறுப்பில் வந்த சார்பதிவாளர், எந்தவித ஆவணங்களையும் சரியாகச் சரிபார்க்காமல், நீதிமன்ற உத்தரவுகளுக்கு முற்றிலும் புறம்பான வகையில் இந்தச் சட்டவிரோதப் பதிவை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

    ​முறைகேடாக செய்யப்பட்ட இந்த ஆவணப் பதிவிற்கு எதிராகத் தக்காரான இணை ஆணையர் மாரிமுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஏற்கனவே மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ​மேலும், ரூ.100 கோடி மதிப்புள்ள பொதுச் சொத்தைச் 2 கோடிக்கு சட்டவிரோதமாகப் பதிவு செய்துள்ளதால், அந்தப் பத்திரப்பதிவினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், விதிமீறிப் பதிவு செய்த அலுவலர் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை பதிவுத்துறை தலைவருக்கு ஆவணங்களுடன் கூடிய அறிக்கையினை இணை ஆணையர் மாரிமுத்து அனுப்பியுள்ளார்.

    Advertisement

    இந்நிலையில், யார் இந்த குப்புச்சாமி மணியகாரர்? எதற்காக இந்த நிலத்தை கோவிலுக்கு கொடுத்தார்? என்பது குறித்து பார்க்கலாம்..

    திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம். வார்டு எண்.3. ப்ளாக் எண். 25 நகரப்புல எண். 998 மற்றும் 999ல் (தற்போதைய பழனி நகர், வார்டு எண்.3, பிளாக் எண் 25 நகர நில அளவை எண். 2) உள்ள 1 ஏக்கர் 40 செண்ட் நிலத்தினை ஆதியில் பாலசமுத்திரத்தினைச் சார்ந்த குப்புச்சாமி மணியகாரருக்கு பாத்தியப்பட்டிருந்தது.

    அவர் ஒரு தண்டபாணி சுவாமி என்பவருக்கு ஆவண எண். 785 நாள். 26.04.1888ன் படி ஒரு தர்ம சாசனத்தின் மூலமாக மடம் கட்டவும், அதில் இந்து மத கோட்பாடுகளை பரப்பவும், அனுசரிக்கவும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி மடத்தினை பல்வேறு நபர்களால் மேற்கண்ட கோட்பாடுகளின்படி அபிவிருத்தி செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டி பழனி தண்டாயதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும் அதிலுள்ள கோவிலில் பூஜை செய்வதற்கும் தர்ம சாசனத்தின்படி நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது.

    Advertisement

    அந்த இடத்தில் உள்ள வருமானத்தினை மேற்படி திருமட பராமரிப்பு மற்றும் பூஜை, கைங்கரிய செலவு ஆகியவைகளுக்கே செய்து வரவும், அந்த சொத்துக்களை யாருக்கும் விற்பதற்கோ,. வில்லங்கப்படுத்துவதற்கோ உரிமை இல்லை என பதிவு செய்யப்பட்ட பத்திரம் மூலம் பெறப்பட்ட இந்த திருமடச்சொத்தை தனிப்பட்ட சொத்தாக கருதி யாரும் விற்பனை செய்ய இயலாது. இந்நிலையில் தண்டாபாணி ஐயா என்பவரால் மேற்படி சொத்து தனிநபர்களுக்கு அவரது வாரிசுகள் மூலம் லீசுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது பத்திரப்பதிவு மூலம் இவ்விவகாரம் பெரிதாகியுள்ளது.

    English Summary

    The 200-year history behind Palani temple’s disputed land and the role of donor Kuppusamy Maniyakkarar explained.