திண்டுக்கல்: மணல் குவாரி முறைகேடு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று அதிகாலையே வந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் உள்ள ஜி.டி.என் கலைக்கல்லூரி நிறுவனரான ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையால் திண்டுக்கல் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபரான ரத்தினம் தரணி குழுமம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் வீடு கட்டுமானம், ரியல் எஸ்டேட், செங்கல் டிரான்ஸ்போர்ட் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்.
தமிழகத்தில் புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன. அந்த வழக்கின் அடிப்படையில், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொள்கிறார்கள். திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜ் தலைமையில் இன்று காலை முதல் திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தேனியில் டிஎஸ்பி முத்துராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு முன்னதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது நடைபெற்ற பணப் பரிவர்த்தனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை இவர் மீது இருமுறை சோதனை நடத்தி, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணல் குவாரி முறைகேடு தொடர்பாகப் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேகர் ரெட்டி தொடர்பான விசாரணையின் தொடர்ச்சியாக, ரத்தினத்தின் வீடு மற்றும் தரணி குழும அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு சோதனை நடத்தினர். அதேபோல் மணல் குவாரி முறைகேடு தொடர்பான விசாரணையில் அமலாக்கத்துறையினர் அவரது வீடு, அலுவலகம் மற்றும் உறவினர் கோவிந்தன் வீட்டில் கடந்த 2013ம் ஆண்டு செப்ம்பரில் சோதனை நடத்தி உள்ளனர். மீண்டும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனையினர் 2023 நவம்பரிலும் சோதனை நடத்தி உள்ளனர்.
இது தொடர்பாக, கனிம வள முறைகேடு விவகாரத்தில் சென்னை சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவரது 2வது மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17 வது வார்டு மாமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகக் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபல தொழில் அதிபர் பி.எல்.எம். பிரேம்குமாரின் 103 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை
ரயிலில் ஏசி பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் ஏறிய பலர்.. பொங்கி எழுந்த பயணிகளின் தரமான சம்பவ வீடியோ