திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் அரசு தொடக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில் மர்ம நபர்கள் மனிதக் கழிவை கலந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஞ்சு குழந்தைகள் அருந்தும் குடிநீரில் விஷம்போல் மலத்தைக் கலந்த இந்த கொடூரக் குற்றமும், அதை மூடிமறைக்க முயன்ற பள்ளி நிர்வாகத்தின் போக்கும் மக்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ள நிலையில், மாநிலத்தின் சமூகநீதித் துறை அமைச்சர் வன்னியரசு இந்த விவகாரத்தில் காட்டி வரும் மௌனம் மிகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், சமூக அநீதிகளுக்கு எதிராகவும் மேடைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் தொடர்ச்சியாக ஆவேசமாக முழங்கி வந்தவர் வன்னியரசு. அதிகாரப் பொறுப்புக்கு வந்த பிறகு, அடித்தட்டு மக்களின் குரலாக ஒலிப்பார் என்று நம்பிய மக்களுக்கு, அரசு பள்ளியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் அவரது அமைதி மிகுந்த ஏமாற்றத்தையே தந்துள்ளது. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் படிப்பவர்கள் ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள். அவர்களின் வாழ்வாதார உரிமையான குடிநீரிலேயே மலத்தைக் கொட்டி அவமதிக்கும் இந்த சமூக விரோத வெறிச்செயலைத் தட்டிக்கேட்க வேண்டிய சமூகநீதி அமைச்சர், சம்பவம் நடந்து பல நாட்களாகியும் ஒரு கண்டன அறிக்கைகூட வெளியிடாமல் மெளனம் சாதிப்பது ஏன் என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. ஏற்கனவே புதுக்கோட்டை வேங்கைவயலில் பட்டியலின மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அந்த விவகாரத்தில் கடுமையான நீதி கோரி வீதியில் இறங்கிப் போராடிய தலைவர்களில் ஒருவர் வன்னியரசு. ஆனால், இன்று அதேபோன்ற ஒரு அருவருக்கத்தக்க வன்மம் பழனி மானூர் தொடக்கப்பள்ளியில் மீண்டும் அரங்கேறியிருக்கிறது. பள்ளியில் விடுமுறை நாட்களைப் பயன்படுத்தி நுழைந்த சமூக விரோதிகள் குடிநீர் தொட்டியில் மலம் கழித்துள்ளனர். இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவராமல் மூடிமறைத்த தலைமை ஆசிரியர் மீதோ, இந்த அநீதியைச் செய்த குற்றவாளிகள் மீதோ உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தாமல் அமைச்சர் அமைதி காப்பது ஏன்? பதவியும் அதிகாரமும் கிடைத்துவிட்டால் பழைய சமூகநீதி முழக்கங்கள் காற்றில் பறந்துவிடுமா என்று சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் ஆவேசத்துடன் கேள்வி எழுப்புகின்றனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்திருப்பது தெரிந்தும், அதை உயர் அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக சுத்தம் செய்து மூடிமறைக்க தலைமை ஆசிரியர் முயன்றுள்ளார். பெற்றோர்கள் திரண்டு வந்து முற்றுகையிட்ட பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. அரசு நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியமும், குற்றத்தை மறைக்கத் துணிந்த துணிச்சலும் எத்தகைய ஆபத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அமைச்சர் களத்தில் இறங்கியிருக்க வேண்டாமா? பாதிக்கப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்திருக்க வேண்டாமா? ஆனால், அமைச்சரோ இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல மௌனம் காப்பது அரசு நிர்வாகத்தின் தோல்வியையே காட்டுகிறது. சமூகநீதி என்பது வெறும் தேர்தல் மேடைகளிலும் அறிக்கைகளிலும் பேசப்படும் வெற்றுச் சொல் அல்ல; அது விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு, உரிமை மற்றும் கண்ணியத்தில் பிரதிபலிக்க வேண்டும். பள்ளிக்குள் நுழைந்து இத்தகைய அருவருக்கத்தக்க காரியத்தைச் செய்த நபர்களைத் தாமதமின்றி கைது செய்ய உத்தரவிட வேண்டும். அதேபோல், உண்மையை மறைத்த பள்ளி நிர்வாகத்தின் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுப் பள்ளி குழந்தைகளின் குடிநீரில் விஷத்தைக் கலந்த இந்த வன்மத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், சமூகநீதி அமைச்சர் வன்னியரசு தனது மௌனத்தைக் கலைத்து, குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் அமைதியா?
வேங்கைவயல் முதல் மானூர் வரை: அதிகாரத்திற்கு வந்ததும் நிலைப்பாடு மாறுவதா?
நிர்வாக அலட்சியத்தை தட்டிக்கேட்கத் தயங்குவது ஏன்?
மௌனத்தைக் கலைக்க வேண்டும்!