துபாய்: அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் இந்த மாத தொடக்கத்தில் ஈரானுக்குள் ரகசிய வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மத்திய கிழக்கில் நிலைமை மோசமாக இருக்கும் சூழலில், இப்போது ஈரானுக்கு எதிராக மற்ற வளைகுடா நாடுகளும் சேர்வது நிலைமையை மோசமாக மாற்றுகிறது.
அமெரிக்கா ஈரான் இடையே பல மாதங்களாக போர் தொடர்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், போர் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. வளைகுடாவில் இந்த போரால் பதற்றம் தொடரும் சூழலில், மற்ற மத்திய கிழக்கு நாடுகள் உள்ளே வந்தால் நிலைமை கையைவிட்டு போகும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இது தொடர்பான தகவல்களை அமெரிக்காவை சேர்ந்த தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ளது. அதில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை கிடங்குகள், ராணுவ தளங்கள் உள்ளிட்ட முக்கிய இலக்குகளை குறிவைத்து பஹ்ரைனும் குவைத்தும் இணைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த தாக்குதல் வெற்றிகரமாக முடிந்ததாகவும் அமீரகம் கொடுத்த உளவு தகவல்களே இந்த தாக்குதலுக்கு முக்கியமானதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உளவு தகவல் மட்டுமின்றி வான்வெளி ஆதரவையும் அமீரகம் கொடுத்துள்ளது. சமீப வாரங்களில் ஈரான் நடத்திய தாக்குதல்களில் பஹ்ரைன் மற்றும் குவைத் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதுவரை நேரடி மோதலை தவிர்த்து வந்த இந்த இரு நாடுகளும், பதிலடி கொடுக்க முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதேநேரம் மறுபுறம், ஓமன் மற்றும் கத்தார் போன்ற வளைகுடா நாடுகள், ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் சமநிலையை கடைப்பிடித்து வருகிறது. சவுதி அரேபியாவும் இதற்கு முன்பு அமீரகத்துடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. ஆனால் இப்போது தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. ஈரானை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் போது அதற்கு அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் பதிலடி கொடுக்கிறது. சமீபத்தில் கூட அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்தது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை தாக்கியதாக ஈரான் தெரிவித்தது. மேலும், அந்நாட்டில் உள்ள அமேசான் டேட்டா சென்டரும் தாக்கப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குவைத்தில் உள்ள கேம்ப் உடைரி, கேம்ப் தோஹா, கேம்ப் அரிஃப்ஜான் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகவும், அலி அல் சலேம் விமானப்படை தளத்தையும் தாக்கி, அங்கு இருந்த ஆயுதக் கிடங்கிற்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தகவல்கள் இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை. அமெரிக்க ராணுவம் பயன்படுத்தும் எந்தவொரு ராணுவ தளமாக இருந்தாலும், அதை வைத்து தங்களை தாக்கினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஏற்கனவே எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.அமீரகம்
வளைகுடா நாடுகள்
ஈரான்
குவைத்