துபாய்: துபாயில் இருந்து டெல்அவிவ் நகருக்கு சென்ற விமானத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை, ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கோடரியால் தாக்கிவிட்டு கடத்த முயன்றார். ஆனால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு வெற்றிகரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தை தரையிறக்கிய 2 விமானிகள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதில் ஒருவர் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி துபாயில் இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகருக்கு 'ஃப்ளைதுபாய்' விமானம் பயணித்தது. விமானத்தில் 174 பயணிகள், 6 விமான பணியாளர்கள் என 180 பேர் இருந்தனர். விமானத்தை இயக்கிய இந்திய கேப்டன் பைலட் ஸ்மித் மச்சார் மீது ஓமன் துணை விமானி ஹமாம் அல் ஹமாமி கொடூரமாக தாக்கினார். காக்பிட்டில் உள்ள அவசரகால கோடரியை எடுத்து ஸ்மித் மச்சாரை வெட்டினார்.பிறகு விமானத்தை கடத்த முயன்றார். ஆனால் ஸ்மித் மச்சார் காக்பிட்டைதிறந்ததால் பயணிகள் சேர்ந்து துணை விமானி ஹமாம் அல் ஹமாமியை சிறை பிடித்தனர். இதையடுத்து விமானத்தில் கூடுதலாக பயணித்த 2 பைலட்டுகள் விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்து இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஆனால் விமானத்தை தரையிறக்கிய 2 விமானிகளின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் தான் முதல் முதலாக அந்த விமானிகள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ரோவன் டூத் இவர் தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். அங்குள்ள கிம்பெர்லி பகுதியில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் பாரி டூத் (Barry Tooth). இவர் தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் கடந்த ஆண்டு தான் மரணமடைந்தார். ரோவன் டூத் முதலில் தென்ஆப்பிரிக்காவின் ஏர்லிங்க் விமான நிறுவனத்தில்பணியாற்றினார். அதன்பிறகு 2023ம் ஆண்டில் ஃப்ளைதுபாய் விமான நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். அதேபோல் இன்னொரு விமானி பிஜி நாட்டை சேர்ந்வர். அவரது பெயர் ஹென்சன் ஸ்டீபன். இவர் பிஜி ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலில் பணியாற்றினார். பிறகு ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்திய விமானி ஸ்மித் மச்சார் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபோது இவர்கள் 2 பேரும் தான் அந்த விமானத்தை வெற்றிகரமாக சவுதி அரேபியாவின் தபுக் விமான நிலையத்தில் தரையிறக்கினர். கடந்த அக்டோபர் 27 ம் தேதி துபாய் - டெல்அவிவ் விமான கடத்தலை தடுத்து நிறுத்தியதற்காக இந்திய பைலட் ஸ்மித் மச்சார் உள்பட விமான பணியாளர்களுக்கு ஐக்கிய அரபு நாட்டின் உயரிய விருதான First Class Order of Zayed II விருது வழங்கப்பட்டது. அப்போது ஸ்மித் மச்சாருடன் விமானத்தை தரையிறக்கிய ரோவன் டூத் மற்றும் ஹென்சன் ஸ்டீபன் ஆகிய விமானிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதன்பிறகு தான் அவர்களின் பெயர் விவரங்கள் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தை தரையிறக்கிய விமானிகளின் பெயர்கள் ரோவன் டூத் மற்றும் ஹென்சன் ஸ்டீபன் என்பதாகும்.