சுட்டு கொல்லப்படும் ஓமன் துணை விமானி? ஐக்கிய அரபு அமீரகத்தில் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா?

  • துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்த முயன்று உயரமான கட்டடத்தில் மோதி விமான விபத்தை ஏற்படுத்த சதி செய்த ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு கிடைக்க கூடிய தண்டனை பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

    Advertisement

    துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரை நோக்கி பயணித்த 'ஃப்ளைதுபாய்' விமானத்தை ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கத்தியால் குத்திவிட்டு விமானத்தை கடத்த முயன்றார்.

    Advertisement

    இஸ்ரேல் நாட்டின் டெல்அவிவ் நகரில் உள்ள அஸ்ரியேலி டவர்களில் மோதி விபத்தை ஏற்படுத்தி பயணிகளை கொல்ல திட்டமிட்டு இருந்தார். இருப்பினும் பயணிகள் அவரை தடுத்து நிறுத்து சிறை பிடித்து அவரது சதி திட்டத்தை முறியடித்தனர்.

    ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் அட்டார்னி ஜெனரல் ஹமித் சாய்ப் அல் ஷம்சி பயங்கரவாத தாக்குதல் என்று உறுதி செய்துள்ளார். இந்நிலையில் தான் ஓமன் துணை விமானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

    Advertisement

    இதுபற்றி ஐக்கிய அமீரகத்தின் சீனியர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஓமன் துணை விமானி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. அதேவேளையில் தற்போது வரை ஒரு கேள்விக்கு விடை கிடைக்காமல் உள்ளது.

    ஓமனில் விமானம் ஓட்ட தடை செய்யப்பட்ட ஹமாம் அல் ஹமாமியை எப்படி 'ஃப்ளைதுபாய்' நிறுவனம் வேலைக்கு எடுத்து பைலட்டாக பயன்படுத்தியது?, இஸ்ரேல் நாட்டுக்கு ஓமன் நாட்டின் பைலட் செல்லக்கூடாது என்ற விதியை மீறி அவரை அனுமதித்தது யார்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டி உள்ளது'' என்று கூறியுள்ளார்.

    Advertisement

    நம் நாட்டில் ஒருவருக்கு மரண தண்டனை என்றால் தூக்கு மூலம் நிறைவேற்றப்படும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தூக்கு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படாது. மாறாக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுவார்கள். மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு என்று அங்கு துப்பாக்கியால் சுடும் பயிற்சி பெற்றவர்கள் உள்ளனர்கள். அவர்கள் மூலமாக இந்த தண்டனை நிறைவேற்றப்படும்.

    ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை திட்டமிட்ட கொலை, பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்காரம், போர் அல்லது பிற சிறப்பு சூழல்களில் அரசின் பாதுகாப்புக்கு எதிராக செயல்படுதல், பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்து குற்றங்கள் செய்தல் உள்ளிட்ட இன்னும் சில குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும்.

    Advertisement

    இதில் கொலை வழக்குகளில் மட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டால் கொலையானவரின் குடும்பம் குற்றவாளியை மன்னித்து ரத்தப்பணம் (Blood Money) கேட்டால் அதனை வழங்கி மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். பிற குற்றங்களுக்கு ரத்தப்பணம் பொருந்தாது. அந்த வகையில் மற்ற குற்றங்களில் மரண தண்டனை விதிக்கப்பட்டால் மேல்முறையீடு, கருணை மனுக்கள் மூலம் தண்டனையை குறைக்கலாம்.

    இதற்கிடையே, தான் ஓமன் துணை விமானி ஹமிம் அல் ஹமாமியிடம் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மட்டுமின்றி இஸ்ரேல், அமெரிக்கா, ஓமன் அதிகாரிகளிடம் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் சார்பில் அந்த நாட்டின் உளவுத்துறையான மொசாத் அமைப்பை சேர்ந்தவர்களும், விமானத்துறை எக்ஸ்பர்ட்டுகளும் விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் அமெரிக்கா மற்றும் ஓமன் நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English Summary

    Oman Co Pilot: Hamim Al-Hamami, an Omani co-pilot, has been arrested for plotting to hijack a Dubai-Tel Aviv flight and crash it into a high-rise building. As UAE authorities currently interrogate him, key information regarding the potential punishment he faces has emerged.