துபாய்: சவுதி அரேபியாவின் தம்மம் விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளதோடு, 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவிற்கும், ஏமன் ஹவுதிகளுக்கும் இடையேயான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை முதல் இரவு வரை ஹவுதிகள் சவுதி அரேபியாவின் விமான நிலையம் மற்றும் எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியாவின் தம்மம் நகரில் உள்ள கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை சவுதி அரேபியாவில் செயல்பட்டு வரும் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று மதியம் 12.43 மணிக்கு வெளியிடப்பட்ட செய்தியில், ''தம்மம் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். 2 இந்தியர்கள் காயமடைந்துள்ளனர் என்று சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை உறுதி செய்து உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வருகிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறோம்'' என கூறியுள்ளார். இந்த தாக்குதல் பற்றி சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து துறை சார்பி்ல, ''தம்மம் விமான நிலையத்தை குறிவைத்து நேற்று மாலையில் தாக்குதல் நடத்தப்பபட்டது. இதில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு செல்லப்பட்டனர். இந்த 'அட்டாக்கில்' சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது. அதன் மதிப்பு மதிப்பிடப்பட்டு வருகிறது'' என கூறியுள்ளது.இந்தியருக்கா இப்படி நடக்கணும்? சவுதியின் ஷைபா எண்ணெய் வயலை தாக்கியபோது துயரம்.. என்ன நடந்தது?