துபாய்: ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக துபாய் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், துபாய் சென்றாலே வாழ்க்கை மேஜிக் போல மாறிவிடாது என கூறியுள்ள பெண் ஒருவர், அங்கு வாய்ப்புகள் அதிகம் என்றாலும் அங்கு சாதிக்க மிக பெரிய முயற்சி தேவைப்படும் என பதிவிட்டுள்ளார்.
துபாய் செல்வது என்பது பலருக்கும் நல்ல வேலை, அதிக சம்பளம், ஆடம்பர வாழ்க்கை என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும். ஆனால் அங்கு சென்ற பிறகு நடக்கும் சம்பவங்கள் உண்மைக்கு வேறுபட்டதாக இருக்கும. இந்நிலையில் ஓராண்டுக்கு முன்பு துபாய்க்கு சென்ற இந்திய பெண் ஒருவர், அங்கு குடியேற நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் குறித்த விவரங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேவ்யான்ஷி பஜாஜ் என்ற அந்த பெண், கடந்தாண்டு துபாய்க்கு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாய் என்றதும் நமக்கு தெரியும் ஆடம்பர வாழ்க்கையை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல், அங்கு செல்வதற்கு முன்பு சில விஷயங்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். துபாய்க்கு செல்வதற்கு முன்பு போதுமான பணத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பதே அவரது முதல் அறிவுரை. துபாயில் வாழ்க்கை செலவு அதிகமாக இருக்கும் என்றும் அனைவருக்கும் எடுத்தவுடன் வேலை கிடைத்துவிடாது எனவும் எதிர்பார்த்ததைவிட வேலை கிடைப்பதற்கு அதிக காலம் ஆகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "சேமிப்பு இல்லாமல் இங்கு வர வேண்டாம். உங்களுக்கு அதிகம் செலவு வைக்கும் இடமாக துபாய் இருக்கும். இங்கு வேலை தேடுவதற்கு நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் ஆகலாம். எனவே அதற்கு தயாராக இருங்கள்" என பதிவிட்டுள்ளார். துபாய்கு வந்து சில காலமே ஆன ஒருவர், அங்கு ஏற்கனவே செட்டிலாகிவிட்டவர்களின் வாழ்க்கையை பார்த்து ஒப்பிட்டு கொள்ளக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அழகான வீடுகளில் வசிப்பவர்கள், ஒவ்வொரு வாரமும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள், தொடர்ந்து பார்ட்டிகளுக்கு செல்பவர்கள் என பலரை நீங்கள் துபாயில் பார்க்கலாம். ஆனால் அவர்கள் அந்த நிலையை அடைய எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்கள் என்பது நமக்குத் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். எனவே, அவர்களை பார்த்து ஒப்பிட்டால் நமக்கு தான் வருத்தம் அதிகரிக்கும் என்றார். மேலும், புதிதாக வேறு நாட்டுக்கு செல்லும்போது நண்பர்கள் வட்டத்தை உருவாக்குவதும் சவாலாக இருக்கலாம் என தேவ்யான்ஷி கூறியுள்ளார். துபாயில் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையை கட்டமைப்பதில் பிஸியாக இருப்பதால், உண்மையான நண்பர்களை உருவாக்க அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "இங்கு நண்பர்களை உருவாக்குவது மிகவும் கடினம். அனைவரும் அவர்களுடைய வாழ்க்கையை கட்டமைப்பதில் பிஸியாக இருக்கிறார்கள். உண்மையான மனிதர்களை கண்டுபிடிக்க நீங்கள் மிக பெரிய முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அதற்கு பெரியளவில் உங்களுக்கு பொறுமையும் தேவைப்படும்" என்றார். துபாய்க்கு சென்றுவிட்டால் வாழ்க்கை தானாக மாறிவிடும் என்று நினைக்க வேண்டாம் என்பதே அவரது நான்காவது அறிவுரை. துபாயில் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது உணமை தான் என்றாலும், அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயற்சியும் கடின உழைப்பும் அவசியம் என தெரிவித்துள்ளார். அவர், "துபாய் உங்கள் வாழ்க்கையை மேஜிக் போல மாற்றிவிடும் என்று நினைத்து இங்கு வர வேண்டாம். உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் கட்டமைக்க வேண்டும். உழைக்க தயாராக இருந்தால் வாய்ப்புகள் நிச்சயம் உள்ளன" என பதிவிட்டுள்ளார். துபாய்க்குச் செல்வதற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில் அவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. அவர் மிகவும் துல்லியமான மற்றும் உண்மையான விஷயங்களை சொல்லியுல்ளதாக நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.துபாய் பெண்
ஒப்பிடக்கூடாது
நண்பர்கள்
மேஜிக் இல்லை