பாய்ந்து வந்த டிரோன் அலை.. நின்ற இடத்திலிருந்து தூக்கிய அமீரகம்.. வளைகுடாவில் மீண்டும் பதற்றம்

  • துபாய்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் தாக்குதல் ஆரம்பித்துள்ள நிலையில், அமீரக கடற்பரப்புக்கு மேலே ஈரான் ட்ரோனை வந்த நிலையில், அது இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகள் இல்லாத நிலையில், இந்த சம்பவம் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக இரு நாடுகளும் நேரடியாக மோதிக் கொள்வதை தவிர்த்தது. மறைமுக மோதல்கள் இருந்தாலும் கூட நேரடி மோதல்கள் எதுவும் இல்லை. இதனால் அங்கு மெல்ல அமைதி திரும்பி வந்தது.

    Advertisement

    அமீரகம்

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. அமீரகத்தில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து ஈரான் டிரோன்களை அனுப்பியதாக தெரிகிறது. அந்த டிரோன்களை அமீரகம் தனது கடல் பகுதிக்கு மேலே தாக்கி அழித்ததாக அமீரகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக அமீரக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "ஈரானில் இருந்து எங்கள் கடற்பரப்பை நோக்கி ட்ரோன் ஒன்று வந்தது. அதை கண்டறிந்து இடைமறித்து தாக்கி அழித்தோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்துக்கு ஈரான் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. இதற்கிடையே துபாயில் உள்ள அல் மேன்ஹத் விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அமீரகம் மறுத்துள்ளது.

    Advertisement

    என்ன நடந்தது!

    முன்னதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா ஈரானில் உள்ள ராக்கெட் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தியில் கடல் கண்ணிவெடிகளை ஏவுவதற்காக ராக்கெட்டுகளை ஈரான் தயார் செய்து வந்ததை கண்டறிந்து, அதை தாக்கி அழித்ததாக அமெரிக்கா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த தாக்குதலால் கோபமடைந்த ஈரான், இதற்குப் பதிலடி கொடுத்தது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவியது. ஜோர்டான் ராணுவமும் தனது வான்வெளிக்குள் நுழைந்த எட்டு ஏவுகணைகளை இடைமறித்ததாக தெரிவித்தது.

    ஈரான் எச்சரிக்கை

    மறுபுறம் ஈரான் தொடர்ந்து அமெரிக்காவை எச்சரித்து வருகிறது. எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் எதிர்ப்போம் என்றும் தங்கள் நாட்டை தற்காத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு இருப்பதாகவும் அந்நாட்டு ராணுவம் கூறியுள்ளது. தங்கள் நாடு போரை விரும்பவில்லை என்றாலும் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அமெரிக்கா நடவடிக்கை

    ஈரானை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்தி, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயன்று வருகிறது. ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் ஈரான் வர்த்தகத்தை முடக்க முடியும் என்றும் அதன் மூலம் ஈரானை தனிமைப்படுத்த முடியும் என்றும் அமெரிக்கா கருதுகிறது. எனவே, ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு வரி விதிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

    இந்தப் போர் பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகிறது. ஜூலை 29ஆம் தேதி அமெரிக்கா ராணுவம் மிக பெரிய தாக்குதலை ஈரான் மீது நடத்தியது. பின்னர் கத்தார், சவுதி அரேபியா மற்றும் அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் வேண்டுகோளை தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் தேதி தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் தாக்குதல் தொடங்கியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    An Iranian drone was intercepted and destroyed over UAE waters amid renewed US-Iran military tensions (வளைகுடாவில் மீண்டும் வெடிக்கும் பதற்றம்): US Iran Tension latest news in tamil.