துபாய்: வளைகுடாவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதர வளைகுடா நாடுகளை குறிவைத்து ஈரான் தனது தாக்குதலை மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு தொடக்கம் முதலே அமெரிக்கா ஈரான் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அணு ஆயுதங்களை தயாரிக்க ஈரான் முயல்வதாக சொல்லி அமெரிக்கா முதலில் தாக்குதலை ஆரம்பித்தது. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். அதன் பிறகே அமெரிக்கா ஈரான் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இதர வளைகுடா நாடுகள் தொடர்ந்து முயன்றது வருகிறது. இது தொடர்பாக தற்காலிக அமைதி ஒப்பந்தம் கூட கையெழுத்தானது. இருப்பினும், அதற்கு மேல் அமைதி பேச்சுவார்த்தையில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு வெடித்தது. சில காலம் இரு நாடுகளும் நேரடியாக தாக்குதலில் ஈடுபடாமல் இருந்த நிலையில், இப்போது மீண்டும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலில் ஈரான் இறங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை ஈரான் வெளியிட்டுள்ளது. அதில் அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா மற்றும் அல் மின்ஹாத் ராணுவ தளங்களில் அமெரிக்கப் படைகளின் ரேடார் அமைப்புகளை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது. மேலும், பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா விமானப்படை தளத்தில் அமெரிக்கப் படைகள் உள்ள பகுதியை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதேபோல் குவைத், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள எர்பில் நகரில் அமெரிக்கப் படைகளை குறிவைத்தும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு அமெரிக்காவும் பதிலடி கொடுக்கும் என தெரிகிறது. இந்த வளைகுடா மோதலால் ஹார்முஸ்ல ஜலசந்தி கடுமையாக முடங்கியுள்ளது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20% இந்த ஹார்முஸ் வழியாகவே நடைபெறும் நிலையில், அங்கு நடக்கும் மோதல் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் விலையை உச்சத்திற்கு எடுத்து செல்கிறது.வளைகுடா மோதல்
துபாயில் தாக்குதல்
ஹார்முஸ்