துபாய்: ஒரு காலத்தில் உள்ளூரில் வேலை கிடைக்காத பலரும் அமீரகம், அதிலும் குறிப்பாக துபாய்க்கு தான் வேலைக்கு போவார்கள். அங்கு போனால் வேலை நிச்சயம் கிடைக்கும் என்பதே அதற்கு காரணம். ஆனால், இப்போது நிலைமை மோசமாக இருக்கிறதாம். பல ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் அமீரகத்திலேயே வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் துபாய்க்கு வேலைக்கு போவதை வழக்கமா வைத்திருக்கிறார்கள். அங்கு போனால் எப்படியாவது வேலை கிடைத்துவிடும்.. சில ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் நல்ல பணத்தை சேமித்து இந்தியா திரும்பிவிடலாம்.. அதன் பிறகு நிம்மதியாக வாழலாம் என்பதே அதற்கு காரணம்!
ஆனால், இப்போது அமீரகத்திலும் கூட வெளிநாட்டினருக்கு முன்பு போல ஈஸியாக வேலை கிடைப்பதில்லையாம். பல ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதே சவாலாக மாறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் வளைகுடா நாடுகளுக்கும் பரவியதைத் தொடர்ந்து, துபாயில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. அப்படியே வேலை கிடைத்தாலும் கூட சம்பளம் கணிசமாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுக்கிறது. அங்கு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் படைகள் இருக்கும் சூழலில் அவர்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக விமானப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு பயணிகளை நம்பியுள்ள பல துறைகள் துபாயில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்குள்ள பல நிறுவனங்கள் செலவைக் குறைக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. அப்படி தான் 44 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜாய் விவாண்டா, கடந்த நான்கு மாதங்களாக வேலை தேடி துபாய் நகரின் பல பகுதிகளில் அலைந்து வருகிறார். ஈரான் மோதலில் ஏற்பட்ட குழப்பத்தால் கடந்த மார்ச் மாதம் அவர் வேலை இழந்தார். இப்போது தனது நான்கு குழந்தைகளை பார்த்து கொள்ள முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். தினசரி எல்லாரிடமும் வேலை கேட்டு அலைந்தும் தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார் ஜாய் விவாண்டா! அதேபோல இந்தியாவை சேர்ந்த கணக்காளர் முஜீப் ரஹ்மானும் கிட்டத்தட்ட இதேபோன்ற அனுபவத்தை சந்தித்துள்ளார். இது தொடர்பாக அவர், "எனது நிறுவனத்திலும் பலர் வேலையிழந்துவிட்டனர். சம்பளம் கொடுக்க போதியளவில் பணப்புழக்கம் இல்லை. இப்போது துபாயில் பல நிறுவனங்கள் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கவே கூட யோசிக்கிறார்கள்" என்றார். சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்ததால் துபாயில் உள்ள பல்வேறு நிறுவனங்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் மாத சம்பளத்தை நிறுத்திவிட்டு, இப்போது கமிஷன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் வழங்குகிறதாம். அதுவும் கூட வழக்கத்தை விட மிக குறைவாகவே இருப்பதாக புலம்பெயர்ந்தவர்கள் புலம்புகிறார்கள். போரால் நிலைமை கையை மீறி செல்வதை தடுக்க அமீரக அரசு 680 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பிலான பொருளாதார உதவி திட்டங்களை அறிவித்துள்ளது. இருப்பினும், நிலைமை சீரடைவில்லை. பல தொழிலாளர்கள் வேலையிழப்பு அபாயத்தையே எதிர்கொண்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடுவில் சில நாட்கள் போர் நிறுத்தம் வந்தபோது, எல்லாம் நார்மலாகும் எனப் பலரும் நம்பினர். ஆனால், இப்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளதால் அங்கு இருக்கும் பல ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள்.வேலை கிடைப்பதில்லை
வேதனை
இந்தியர்
உதவி திட்டம் பலன் தரல