துபாய்: சவுதி அரேபியா மீது ஹவுதிகள் தொடர்ந்து துல்லியமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் சவுதி அரேபியா நிலைக்குலைந்துள்ளது. இந்நிலையில் தான் பரம எதிரியாக இருந்தாலும் கூட ஹவுதிகளிடம் அடிவாங்குவதை பார்க்க முடியாமல் சவுதி அரேபியாவிற்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. ஆனால் அந்த உதவியை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நிராகரித்துள்ளார். என்ன நடந்தது? இஸ்ரேல் ஏன் சவுதி அரேபியாவிற்கு உதவ துடிக்கிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
சவுதி அரேபியா தற்போது ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதிகளிடம் அடிவாங்கி வருகிறது. ஹவுதிகள் அடுத்தடுத்து சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து தாக்கி வருகின்றன. குறிப்பாக சவுதி தலைநகர் ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதேபோல் அபா சர்வதேச விமான நிலையத்தில் ஒருமுறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 19 பேர் பலியான நிலையில் 300க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சவுதி அரேபியாவை எடுத்து கொண்டால் அமெரிக்காவிடம் இருந்து 'தாட்' வான்வெளி பாதுகாப்பு அமைப்பை வாங்கி வைத்துள்ளது. இது எதிரி நாடுகள் அனுப்பும் ட்ரோன், ஏவுகணைகளை கண்டுபிடித்து வானிலேயே அழிக்கும். ஆனால் இந்த அமைப்பையும் தாண்டி ஹவுதிகள் துல்லியமாக தாக்குதல் நடத்தி வருவது சவுதி அரேபியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இப்படியான சூழலில் தான் சவுதி அரேபியாவிற்கு உதவி செய்ய இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் எதிரிகளாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலை, சவுதி அரேபியா தற்போது வரை தனிநாடாகா அங்கீகரிக்கவில்லை. இப்படி பரம எதிரியாக இருந்தாலும் கூட இஸ்ரேல், ஹவுதிகள் மீது தாக்குதல் நடத்த ஆர்வம் காட்டி வருகிறது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சவுதி அரேபியாவிடம் அனுமதி கோரியுள்ளார். ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலில் தங்களையும் சேர்த்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வழியாக (இஸ்ரேல் மற்றும் சவுதிக்கு அமெரிக்கா நட்பு நாடாக உள்ளது) தூது அனுப்பி உள்ளது. இதனை இஸ்ரேலின் Haaretz பத்திரிகை உறுதி செய்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் இந்த ஆஃபரை சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்கவில்லை. நிராகரித்துள்ளார். ஹவுதிகளுக்கு எதிரான மோதலில் இஸ்ரேல் உள்ளே நுழைந்தால் அது சவுதி அரேபியா மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து பட்டத்து இளவரசர் இந்த முடிவை எடுத்துள்ளார். அதேவேளையில் தங்களை இன்னும் தனி நாடாக அங்கீகரிக்காத சவுதி அரேபியாவிற்கு உதவ இஸ்ரேல் துடிப்பதன் பின்னணியில் முக்கிய விஷயங்கள் உள்ளன. ஒன்று எப்படியாவது சவுதி அரேபியாவுடன் நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று பெஞ்சமின் நெதன்யாகு விரும்புகிறார். இஸ்ரேல் - சவுதி அரேபியா இடையேயான உறவை பலப்படுத்தி ஆபிரகாம் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கிறார். ஆனால் பாலஸ்தீனத்தை தனி நாடாக இஸ்ரேல் அங்கீகரிக்க வேண்டும். அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என சவுதி நினைக்கிறது. இதனை இஸ்ரேல் ஏற்கவில்லை. இதுதொடர்பாக இருநாடுகள் இடையேயான உறவில் அதிக விரிசல் ஏற்பட்டது. தற்போது எப்படியாவது சவுதி அரேபியாவுடன் நட்பாக இஸ்ரேல் நினைக்கிறது. இதற்கு ஏற்ற சூழல் வருமா? என இஸ்ரேல் எதிர்பார்த்து காத்திருக்கிறது. இதற்கிடையே தான் சவுதி அரேபியா - ஹவுதி மோதல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஹவுதிகளிடம் அடிவாங்கும் இந்த இக்கட்டான சூழலில் உதவி செய்து சவுதி அரேபியாவுடன் நட்பை பலப்படுத்தலாம் என இஸ்ரேல் திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறது. 2வது விஷயம் என்னவென்றால் ஹவுதிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பிரச்சனை உள்ளது. ஹவுதிகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி செங்கடல் பகுதிகளில் இஸ்ரேல் கப்பல்களுக்கு ஹவுதிகள் அச்சுறுத்தலாக உள்ளன. இதனால் சவுதி அரேபியா மீதான தாக்குதலை வைத்து ஹவுதிகளை பந்தாட இஸ்ரேல் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் இஸ்ரேலின் கோரிக்கைக்கு சவுதி அரேபியா செவிசாய்க்கவில்லை.