துபாய்: ஷார்ஜியாவில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலை ஒன்றில் நிறுத்தப்பட்ட காரில் அவரது உடல் 9 துண்டுகளாக வெட்டப்பட்டு இருந்தது. சகோதரருக்கு இந்த இளைஞர் அனுப்பிய ஒரே ஒரு மெசேஜ் மூலம் இந்த கொடூர கொலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரத்தை சேர்ந்த அலுவின் பிரகாஷ் குந்தர் என்பவர் ஷார்ஜாவில் பணியாற்றி வந்தார். அலுவின் பிரகாஷ் கடந்த 14 ஆண்டுகளாக ஷார்ஜா விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சொந்த ஊருக்கு வந்த அவர், பின்னர் மீண்டும் ஷார்ஜா சென்றுள்ளார்.
அவரது மனைவி டினா குந்தரும் ஷார்ஜாவில் பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். உடுப்பி மாவட்டம் உடையவாராவை சேர்ந்த இந்த தம்பதி, தங்கள் மகனுடன் ஷார்ஜியாவில் வசித்து வந்ததாக அலுவின் பிரகாஷின் சகோதரர் அனில் பிரசாந்த் குந்தர் தெரிவித்துள்ளார். அவர்களது மகன் அங்கு 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூலை 20ஆம் தேதி தனது சகோதரரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள அனில் முயன்றுள்ளார். ஆனால், அலுவின் பிரகாஷ் அழைப்பை எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, தான் நலமாக இருப்பதாக ஒரு மெசேஜ் வந்ததாக அனில் கூறியுள்ளார். ஆனால், இதுபோன்ற மெசேஜ்ஜை தனது சகோதரர் ஒருபோதும் அனுப்ப மாட்டார் என்பதால் அனிலுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து மீண்டும் அழைத்தபோதும் பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து ஷார்ஜாவில் இருந்த அலுவின் பிரகாஷின் பள்ளி நண்பர் மனோகரை அனில் தொடர்புகொண்டு, அவரது வீட்டுக்கு சென்று பார்த்து வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மனோகர் சென்றபோது, நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த குடியிருப்பில் அலுவின் பிரகாஷ் இல்லை. அவர் இந்தியாவுக்கு சென்றுவிட்டதாக அங்கிருந்த காவலாளி தெரிவித்ததாக அனில் கூறியுள்ளார். இது குறித்து அவர் வேலை செய்த நிறுவனத்தை அணுகியபோதும், அலுவின் பிரகாஷ் இந்தியாவுக்கு திரும்பியதாகவே ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அலுவின் பிரகாஷ் இந்தியாவுக்கு வந்ததாக கூறப்படுவது உண்மையல்ல என்று அனில் நிறுவனத்திடம் மீண்டும் தெரிவித்துள்ளார். அவரது எங்கே இருக்கிறார் என்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பாஸ்போர்ட் சோதனையில்.. அலுவின் பிரகாஷ் ஷார்ஜாவை விட்டு வெளியேறவில்லை என்பது தெரிய வந்தது. அதன் பிறகே அவர் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில், ஓமனை நோக்கி செல்லும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் அலுவின் பிரகாஷின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடல் இரண்டு பைகளில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அது 9 துண்டுகளாக வெட்டப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அலுவின் பிரகாஷின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை கிடைத்த நிலையில், அவர்கள் உடுப்பி போலீசாரை அணுகியதாகவும் அனில் தெரிவித்துள்ளார். தனது சகோதரர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி மனுவையும் அளித்தனர். அலுவின் பிரகாஷின் மனைவி மற்றும் மகன் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்தும் தெளிவான தகவல் வெளியாகவில்லை. கொலை நடந்த பிறகு இருவரும் மாயமாகிவிட்டதாக கூட தகவல் வெளியாகியுள்ளது. கட்டிடத்தில் இருந்து இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் வெளியேறியும் சிசிடிவி காட்சிகளை தான் பார்த்ததாக அனில் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த தகவல்களை யாரும் உறுதி செய்யவில்லை. இந்த கொலையின் பின்னணி என்ன, கொலைக்கான காரணம் என்ன, இதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஷார்ஜா அதிகாரிகளின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பல பலகீர் தகவல்கள் வெளியாகும் என அஞ்சப்படுகிறது.அந்த ஒரு மெசேஜ்
மாயம்
9 துண்டுகளாக
தகவல் இல்லை