பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்


  • துபாய்: 'ஐஐடி கனவு தகர்ந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்தது' என்று நினைக்கும் பலருக்கும் மத்தியில், தன் உழைப்பால் துபாய் வரை உயர்ந்து, ஒரு நிறுவனத்தின் மிக இளம் வயது துணைக் தலைவராக மாறியுள்ள ஒரு இந்திய மென்பொறியாளரின் உணர்வுப்பூர்வமான பயணம் பற்றி பார்ப்போம். இன்றைக்கு தோல்விகளாலும் வறுமையாலும் சோர்ந்துபோயிருக்கும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு இளைஞரின் கதை தான் இது.

    Advertisement

    எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் பகிர்ந்துள்ள பதிவு பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது. ஐஐடி நுழைவுத் தேர்வில் ஒருமுறை அல்ல, இரண்டு முறை தோற்றுப்போனார் அவர். ஆனால் இன்று மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளார். அந்த பதிவினை அப்படியே பார்ப்போம்.

    Advertisement

    "ஒரு கட்டத்தில் என் வாழ்க்கையே முடிந்துவிட்டது போலத்தான் தோன்றியது" என்று அவர் அந்த நாட்களில் தனக்குள்ளே இருந்த வலியைப் பகிர்ந்துகொண்டுள்ளார். ஒரு சிறிய ஊரில் பிறந்து வளர்ந்ததால், சுற்றியுள்ளவர்களின் ஒப்பீடுகளும், அவர்களின் மௌனமான ஏளனப் பார்வைகளும் அந்தத் தோல்வியை இன்னும் ரணமாக்கியதாக கூறியுள்ளளார். அதனை அப்படியே அவரது மொழியில் பார்ப்போம்.

    என் கதையை, என் மனதின் ஆழத்திலிருந்து உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்... "வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்த கணங்கள் அவை..."
    ஐஐடி நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்தேன். ஆனால், முடிவு? தோல்வி. ஒருமுறை அல்ல, இரண்டு முறை தோற்றுப்போனேன். அந்தத் தருணத்தில், "இனி என் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? எல்லாம் முடிந்துவிட்டது" என்றுதான் எனக்குத் தோன்றியது.

    Advertisement

    ஒரு சிறிய ஊரிலிருந்து வந்த எனக்கு அந்தத் தோல்வி இன்னும் நரகமாக இருந்தது. சுற்றிலும் இருந்தவர்களின் ஒப்பீடுகள், உறவினர்களின் மௌனமான ஏளனப் பார்வைகள், பெற்றோருக்கு நான் ஏற்படுத்திய ஏமாற்றம்... இவை அனைத்தும் என் நெஞ்சை அடைத்தது.

    சொந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல், ஒரு முடிவோடு வேறொரு நகரத்தில் இருந்த ஒரு அரசுப் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தேன். ஆனால், அங்கும் எனக்குப் பாதை எளிதாக இல்லை. என் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் அப்படி. என் கல்விக்காகப் பெற்றோரிடம் பணம் இல்லை. முழுக்க முழுக்கக் கல்விக்கடனை நம்பியே என் படிப்பைத் தொடங்கினேன்.

    Advertisement

    அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட்டம். எப்படியாவது வாழ வேண்டுமே? அதனால் பள்ளி மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தேன். காலேஜ் படிப்பு, அப்புறம் டியூஷன்...

    சில நாட்களெல்லாம் சாப்பாட்டுக்குக் கூடக் காசு இருக்காது. வெறும் ஒன்று அல்லது இரண்டு சமோசாக்களை மட்டும் சாப்பிட்டுவிட்டு, பசியோடு இரவெல்லாம் விழித்திருந்து படித்த நாட்களை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.

    கல்லூரி முடித்ததும் எனக்கு ஒரு ஐடி சப்போர்ட் வேலை கிடைத்தது. மாதச் சம்பளம் 20,000 ரூபாய். எனக்கு அது பெரிய விஷயமாக இருந்தாலும், என் மனதிற்குள் ஏதோ ஒன்று, "உன் இலக்கு இதுவல்ல" என்று சொல்லிக்கொண்டே இருந்தது. என் குடும்பத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. பகலில் ஆபீஸ் வேலை, இரவு முழுக்கப் படிப்பு. அப்போதுதான் வளர்ந்து வந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் மிஷின் லேர்னிங் துறைகளை நானே படிக்கத் தொடங்கினேன்.

    Advertisement

    என்னிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் படிக்க கோர்ஸ்கள் இல்லை. கைக்காட்டி வழிகாட்ட எந்த மென்டாரும் இல்லை. ஒரு முறையான ரோட்மேப் கூடக் கிடையாது. என்னிடம் இருந்தது மூன்றே விஷயங்கள்தான் - இன்டர்நெட், அளவுக்கடந்த ஆர்வம், என் வாழ்க்கையை மாற்றியே தீர வேண்டும் என்ற தீராத பசி.

    மாறிய தலைவிதி

    என் உழைப்பு வீண் போகவில்லை. ஒரு ஏஐ ப்ராஜெக்ட்டில் வேலை செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதுதான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை! அங்கிருந்து மெதுவாகப் தயாரிப்பு மேலாண்மை மற்றும் வணிகத் தலைமைப் பொறுப்புகளுக்கு உயர்ந்தேன்.
    நான் தோற்ற அதே ஆண்டில் ஐஐடி-க்குள் நுழைந்த என் நண்பர்களை இன்று பார்க்கிறேன். அன்று அவர்கள் அடைந்த உயரத்தை, இன்று நான் என் கடுமையான உழைப்பால் அடைந்திருக்கிறேன். அவர்களுக்கு இணையாக, ஏன் சில இடங்களில் அவர்களை விடவும் சிறந்த வருமானத்தை இன்று நான் ஈட்டுகிறேன். இன்று நான் துபாயில் ஒரு நிறுவனத்தின் மிக இளம் வயது துணைக் தலைவராக அமர்ந்திருக்கிறேன்" என்று உற்சாகமாக பேசுகிறர்.

    Advertisement

    இன்று ஐஐடி, நீட் போன்ற தேர்வுகளில் தோற்றுப்போய், வாழ்க்கையே முடிந்தது என்று முடங்கிக்கிடக்கும் பலரும் அறிய வேண்டியது இதுதான்:
    ஒரு அசாதாரணமான வாழ்க்கையை நீங்கள் வாழ வேண்டும் என்றால், உங்களின் ஆரம்பம் மிகச் சரியானதாகவோ அல்லது பிரம்மாண்டமானதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுக்குத் தேவை ஒன்றுதான் - விழுந்தாலும் மீண்டு எழும் மன உறுதிதான். ஒரு தேர்வு உங்களைத் தீர்மானிக்காது. உங்களை நீங்களே செதுக்கிக்கொள்ளுங்கள். காலம் உங்களுக்கான பாதையைத் திறக்கும்!

    English Summary

    From Starvation and Loan Burdens to Dubai's Corporate Crown: The Unstoppable Rise of a Twice-Failed IIT Aspirant