தூதரகத்திற்கு போனால் வேலை நடக்காது.. அமீரக இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு! விசா சேவையில் மாற்றம்

  • துபாய்: அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கான பாஸ்போர்ட், விசா, அட்டெஸ்டேஷன் உள்ளிட்ட தூதரக சேவைகளில் இன்று முதல் முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் இந்த சேவைகள் அனைத்தும் தனியார் நிறுவனத்தின் மூலம் செயல்படும் 16 இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் வழியாக வழங்கப்பட உள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

    Advertisement

    அமீரகத்தில் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து அதிகளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இதனால் அமீரகத்தில் நடக்கும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட கவனத்தை ஈர்ப்பதாகவே உள்ளது. இதற்கிடையே தூதரக சேவைகளில் முக்கியமான மாற்றம் வந்ததுள்ளது.

    Advertisement

    தூதரக சேவை

    அதாவது இதுவரை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள இந்திய துணை தூதரகமும் நேரடியாக பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா, ஆவண அட்டெஸ்டேஷன் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வந்தன. இப்போது அந்த நடைமுறையில் தான் மாற்றம் வந்துள்ளது. தனியாரை சேர்ந்த அல்ஹிந்த் டூர்ஸ் & டிராவல்ஸ் (AlHind Tours & Travels) மூலம் செயல்படும் 16 இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் வழியாக இனிமேல் இந்த சேவையை பெறலாம்!

    நேரடியாக தூதரகத்தில் இந்த சேவை கிடைக்காது. வரும் நாட்களில் இவை அனைத்தும் ICAC மையங்கள், அதாவது இந்திய தூதரக விண்ணப்ப மையங்கள் மூலமாக மட்டுமே வழங்கப்படும். இதனால், இந்தியர்கள் தூதரகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

    Advertisement

    எப்படி செயல்படும்

    இந்த சேவைகளைப் பெற விரும்புபவர்கள் consular seva in uae இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். தினமும் காலை 9 மணி மற்றும் இரவு 9 மணிக்கு டைமிங் வெளியிடப்படும். அனைத்து ICAC மையங்களும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். முன்பதிவு செய்த நேரத்திற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே மையத்திற்குள் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் தட்கல் பாஸ்போர்ட், புதிதாக பிறந்த குழந்தைகளுக்கான சேவைகள், எமர்ஜென்சி சான்றிதழ் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகியோர் முன்பதிவு இல்லாமல் நேரடியாக சேவை பெறலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.. இருப்பினும், இது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும்.

    Advertisement

    கட்டணம்

    இந்த சர்வீஸுக்கு தூதரகம் நிர்ணயம் செய்துள்ள கட்டணத்துடன் சேர்ந்து கூடுதலாக சேவை கட்டணமாக 19 திர்ஹாம் வசூலிக்கப்படுமாம். விண்ணப்பப் படிவம் நிரப்புதல் தொடங்கி புகைப்படம் எடுப்பது, ஆவணங்களை டைப் செய்தல், பிரிண்ட், உள்ளூர் கூரியர் செலவு அடங்கும்.

    பின்னணி

    இதற்கு முன்பு வேறு ஒரு தனியார் நிறுவனம் இந்த சேவைகள வழங்கி வந்தது. இருப்பினும், அந்த நிறுவனத்திற்கு எதிராக ஏகப்பட்ட புகார்கள் குவிந்தன. மேலும், வழக்குகளும் தொடரப்பட்டன. அதைத் தொடர்ந்தே புதிய ஒப்பந்தம் அல்ஹிந்த் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்திற்கு எதிராக சில நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியதால், சர்வீஸை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.

    Advertisement

    இதையடுத்து அபுதாபி மற்றும் துபாயில் உள்ள இந்திய தூதரகங்களே தற்காலிகமாக சேவைகளை நேரடியாக வழங்கி வந்தன. இந்த சிக்கலால் கோடை விடுமுறை காலத்தில் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டிய இந்தியர்கள் கடுமையான சிரமங்களைச் சந்தித்தனர். பலர் பல நாட்கள் முன்பதிவு செய்ய முடியாமல் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்தச் சூழலில் சமீபத்தில் தான் உச்சநீதிமன்றம் அல்ஹிந்த் நிறுவனத்திற்கு சேவையை ஆரம்பிக்க அனுமதி கொடுத்தது. அதைத் தொடர்ந்தே இப்போது இந்த சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

    English Summary

    A major change has come into effect for Indians living in the UAE(அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களுக்கான விசா சேவையில் மாற்றம்): Passport, visa, attestation and other consular services changed for Indians In UAE.