ஒரே ஒரு பறவையை.. ரூ.3.85 கோடிக்கு ஏலம் எடுத்த நபர்! மருமகளுக்காக மாமா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு!

  • துபாய்: பறவைகளை ரசிப்பது பலருக்கும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு. ஆனால், ஒரு பறவையின் விலை பல கோடிகளைத் தொடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படியொரு ஆச்சரியமான சம்பவம் அபுதாபியில் நடந்துள்ளது.

    Advertisement

    முழுவதுமாக பனி போல் வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒரு அரிய வகை வல்லூறு பறவை, சர்வதேச ஏலத்தில் சுமார் 3.85 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

    Advertisement

    மருமகளின் ஆசையை நிறைவேற்றிய பாசக்கார மாமா

    இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ஒரு அழகான குடும்பப் பாசக் கதையும் ஒளிந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஷேக்கா அல் மன்சூரி என்ற சிறுமிக்கு பறவைகள் மீதும், குறிப்பாக வல்லூறுகள் மீதும் சிறுவயதிலிருந்தே பிரியம். அபுதாபியில் ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச வேட்டை மற்றும் குதிரையேற்றக் கண்காட்சிக்கு தன் மாமாவுடன் அந்தச் சிறுமி சென்றிருந்தார்.

    அங்கு நடந்த ஏலத்தைப் பார்வையிட்டபோது, இந்த அரிய வகை வெள்ளை வல்லூறு சிறுமியின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. பறவைகள் பற்றி இவ்வளவு ஆர்வமாக இருக்கும் உனக்கு இதையெல்லாம் யார் கற்றுக் கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு, அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டே, "எல்லாம் என் மாமாதான் சொல்லிக் கொடுத்தார்" என்று பெருமையுடன் கூறினார். சிறுமியின் ஆசையையும் பறவைகள் மீதான காதலையும் பார்த்த மாமா, உடனே ஏலத்தில் கலந்துகொண்டு, யாரும் எதிர்பாராத தொகையைக் கொடுத்து அந்தப் பறவையை வாங்கி மருமகளுக்குப் பரிசாக அளித்தார்.

    Advertisement

    ரூ.3.85 கோடிக்கு என்ன காரணம்? இந்த பறவையின் சிறப்பு என்ன?

    ஏலத்தில் விற்கப்பட்ட இந்தப் பறவை சாதாரணமானது அல்ல. இதன் பெயர் 'அல்ட்ரா ஒயிட் ப்யூர் கிர் கார்மௌஷா' வகையைச் சேர்ந்த வல்லூறு குஞ்சு.

    முழுமையான வெள்ளை நிறம்: உடலின் ஒரு பகுதியில் கூட வேறு எந்த நிறப் புள்ளிகளும் இல்லாமல், பனிப்பொழிவு போல அசல் தூய வெள்ளை நிறத்தில் இதன் இறகுகள் அமைந்திருப்பது இயற்கையின் மிக அரிய தோற்றமாகும்.

    அளவு மற்றும் எடை: இந்தப் பறவை சுமார் 1 கிலோ எடை மட்டுமே கொண்டது. இதன் நீளமும் அகலமும் சுமார் 16.5 அங்குலங்கள் ஆகும்.

    Advertisement

    அமெரிக்கப் பண்ணை: மிகவும் புகழ்பெற்ற மார்க் மோக்லிச் ஃபால்கன் பண்ணையில் இருந்து இது கொண்டுவரப்பட்டது.

    அரபு நாடுகளில் வேட்டைப் பறவைகளை வளர்ப்பது அவர்களின் பாரம்பரிய கலாசாரத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. அதிலும் தூய வெள்ளை நிற வல்லூறுகள் கிடைப்பது மிகவும் அரிது என்பதால், பணக்காரர்களும் பறவை ஆர்வலர்களும் இதைப் பெற கடும் போட்டியில் இறங்கினர்.

    சமூக வலைதளங்களில் வைரல்

    ஐந்தாவது சுற்று ஏலத்தில் கடும் போட்டி நிலவியது. இறுதியாக 15 லட்சம் திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 3.85 கோடி ரூபாய்) தொகைக்கு அந்தப் பறவை ஏலம் போனது. இந்த ஆண்டு அபுதாபி கண்காட்சியில் இதுவரை விற்கப்பட்ட பறவைகளிலேயே இதுதான் மிக அதிக விலைக்குப் போன பறவை என்ற சாதனையைப் படைத்துள்ளது.

    Advertisement

    ஏலம் முடிந்த பிறகு சிறுமியும் அவரது மாமாவும் பேசும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி லட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்துள்ளது. ஒரு சிறிய பறவைக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவு செய்த மாமாவின் பாசத்தையும், பறவைகள் மீது அந்தச் சிறுமி வைத்திருக்கும் ஈடுபாட்டையும் நெட்டிசன்கள் வியப்புடன் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர். இந்த ஆண்டு நடந்த கண்காட்சியில் உலகின் 55 முன்னணி பறவை வளர்ப்புப் பண்ணைகள் கலந்துகொண்ட போதிலும், இந்த வெள்ளை வல்லூறும் அதை வாங்கிய குடும்பமும் தான் அனைவரின் கவனத்தையும் ஒட்டுமொத்தமாக ஈர்த்துள்ளது.

    English Summary

    Rs 3.85 Crore For A Bird! Pure White Falcon Sold In Abu Dhabi Auction As Uncle Surprises Niece