துபாய்: இஸ்ரேல் பிறந்து 78 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அதனை தனி நாடாக சவுதி அரேபியா அங்கீகரிக்கவில்லை. இருநாடுகள் இடையேயான மோதல் எப்படி இருக்கிறது? என்பதற்கு இந்த ஒரு நிகழ்வே சாட்சியாகும். ஆனால் தற்போது நிலைமை மாறி உள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளை நம்பி ஏமாந்து ஹவுதிகளின் தாக்குதலில் சவுதி அரேபியா பாதிக்கப்பட்டு திணறி வரும் நிலையில் இஸ்ரேல் உடனான உறவை வலுவாக்கும் சூழல் உருவாகி உள்ளது பேசும்பொருளாகி உள்ளது.
சவுதி அரேபியா மீது ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகினறன. ரியாத்தின் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குலில் 14 பேர் இறந்ததோடு, 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுவரை ஹவுதிகளின் தாக்குதலில் சவுதி அரேபியாவில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
தொடர்ந்து ஹவுதிகள் விமான நிலையம், கச்சா எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் சவுதி அரேபியா திணறி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் 'தாட்', 'பேட்ரியாட்' உள்ளிட்ட வான்வெளி பாதுகாப்பு அம்சங்கள் சவுதி அரேபியாவின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவில்லை. அதுமட்டுமின்றி நெருங்கிய நட்பு நாடு என்று அடிக்கடி சொல்லும் டிரம்பும் அடுத்த மாதம் அந்த நாட்டில் நடக்கும் இடைக்கால தேர்தல் காரணமாக இந்த மோதலில் தலையிட தயங்குகிறார். அதேபோல் 'மெக்கா' ஒப்பந்தப்படி பாகிஸ்தான், துருக்கியும் சவுதி அரேபியாவிற்காக, ஹவுதிகளுக்கு எதிராக பெரிய அளவில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சவுதி அரேபியாவின் பாதுகாப்புக்கு இந்த ஒப்பந்தம் எந்த அளவிலும் பயனளிக்கவில்லை. இதனால் தான் சவுதி அரேபியா தற்போது இஸ்ரேலை நோக்கி செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இஸ்ரேல் உருவாகி 78 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சவுதி அரேபியா அந்த நாட்டை அங்கீகரிக்கவில்லை. ஆனால் தற்போது இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக 'தி ஜெருசலேம் போஸ்ட்' எனும் இஸ்ரேல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ''ஹவுதிகளுக்கு எதிரான இஸ்ரேலின் உளவு தகவல்கள் தொடர்பான உதவிகள் குறித்து அமெரிக்கா வழியாக சவுதி அரேபியாவிடம் பேசப்பட்டுள்ளது'' என கூறப்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த 'அல் மானிட்டர்' ஊடகம் வெளியிட்ட செய்தியில், ''சவுதி அரேபியாவின் ராணுவம் சார்ந்த சிக்கல்களை தனக்கு சாதகமாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பயன்படுத்த முயன்றார். இஸ்ரேல் உளவுத் தகவல்களை வழங்கவும், சவூதி அரேபியாவுடன் ராணுவ ஆலோசனைகளை நடத்தவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்'' என செய்தி வெளியிட்டது. குறிப்பாக அக்டோபர் 11ம் தேதி ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட ஹவுதிகளின் தாக்குதலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டித்தார். இதன்மூலம் சவுதி அரேபியாவுடன் நெருக்கமாக செயல்பட தயார் என்பதை நெதன்யாகு உணர்த்தினார். அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவை பாதுகாக்க ஹவுதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைய தயார் என்று நெதன்யாகு அமெரிக்கா வழியாக சவுதி அரேபியாவிற்கு தூது அனுப்பினார். ஆனால் அதனை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுத்துவிட்டார். எப்படியாவது ஹவுதிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் திரைமறைவில் சவுதி அரேபியா - இஸ்ரேல் நெருக்கமாக செயல்பட தொடங்கி உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தற்போது ஹவுதிகளுக்கு எதிராக இருநாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான அம்சங்களை ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இது நடக்கும் பட்சத்தில் சவுதி அரேபியா - இஸ்ரேல் நாடுகள் நெருக்கமாக செயல்பட தொடங்கும். இது மத்திய கிழக்கில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். முன்னதாக சவுதி அரேபியா - இஸ்ரேல் இடையேயான உறவை வளர்க்க கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. ஆபிரகாம் ஒப்பந்தம் அடிப்படையில் இருநாடுகளின் உறவை வளர்க்க அமெரிக்கா முயன்றது. ஆனால் 2023 அக்டோபர் 7 ம் தேதி காசாவின் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல், காசாவில் போரை தொடங்கியது. இதனால் அந்த முயற்சி கைநழுவிப்போன நிலையில் தற்போது சவுதி அரேபியா - இஸ்ரேல் இடையேயான உறவு வலுவடைய வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.