ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன்.. புதிய நிர்வாகிகள் பதவியேற்பு.. தலைவராக கே. பாலகிருஷ்ணன் பொறுப்பேற்பு

  • துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்காகச் செயல்படும் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்று 'ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன்'. இந்த அமைப்பின் 2026-2028-ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.

    Advertisement

    இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பதவியேற்பு விழா, செப்டம்பர் 19, 2026 அன்று மாலை 7:00 மணிக்கு குபைபாவில் உள்ள ஷார்ஜா இந்தியப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.

    Advertisement

    தேர்தல் அதிகாரி பால் டி. ஜோசப் அவர்கள் தேர்தல் முடிவுகளை முறைப்படி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு தூதரக அதிகாரி சுனில் குமார் அவர்கள் புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் ஷார்ஜா சமூக சேவைகள் துறையைச் (SSSD) சேர்ந்த அப்துல்லா பு அலி மற்றும் தய்யாப் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

    புதிய தலைவராக கே. பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளராக வழக்கறிஞர் ஒய். ஏ. ரஹீம் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுடன் இணைப் பொதுச் செயலாளராக வழக்கறிஞர் அன்சார் என்.டி, இணைப் பொருளாளராக அனிலால் புருஷோத்தமன், தணிக்கையாளராக (Auditor) தங்கச்சன் மண்டபத்தில் மற்றும் ஆறு நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

    Advertisement

    சொந்தக் காரணங்களுக்காக இந்தியா சென்றுள்ள துணைத் தலைவர் டி.கே. பிரதீப், பொருளாளர் ஜிபி பேபி மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர் கே.கே. தாலிப் ஆகியோர் அமீரகம் திரும்பியதும் பொறுப்பேற்க உள்ளனர்.

    விழாவில் பேசிய புதிய தலைவர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் பொதுச் செயலாளர் ஒய். ஏ. ரஹீம், இந்திய துணைத் தூதரகம், ஷார்ஜா அரசுத் துறை, தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்களித்த உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், ஷார்ஜாவில் வாழும் அனைத்து இந்தியர்களின் கல்வி, மருத்துவம் மற்றும் பொது நலனுக்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாக உறுதி அளித்தனர்.

    English Summary

    Sharjah Indian Association: New Committee Sworn In for 2026–2028; K. Balakrishnan Takes Charge as President