அமீரகத்துடன் போரை ஆரம்பிக்கும் ஈரான்? பற்றி எரியும் வளைகுடா.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது

  • துபாய்: ஈரானுடன் அனைத்து வர்த்தகம், நிதி நடவடிக்கைகளை என அனைத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அமீரகம் அறிவித்துள்ளது. அமீரகத்தை நோக்கி ஈரான் 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக அமீரக அரசு குற்றஞ்சாட்டி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் ஈரானுக்கும் அமீரகத்திற்கும் இடையே நேரடியாக போர் வெடிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    அமெரிக்கா ஈரான் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் தொடர்ந்து வருகிறது. நேரடி தாக்குதல்கள் நின்றுவிட்டாலும் கூட இன்னும் பதற்றம் குறையவே இல்லை. அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் பதற்றம் தொடர்ந்து வருகிறது.

    Advertisement

    அமீரக அரசு

    இந்த சூழலில் தான் நேற்று செவ்வாய்க்கிழமை ஈரானில் இருந்து அமீரகத்தை நோக்கி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமீரகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அமீரக அரசு தனது பொதுமக்களுக்கு உடனடியாக செல்போன்கள் மூலம் அவசர எச்சரிக்கை அனுப்பியுள்ளது. மேலும், மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய அறிவுறுத்தப்பட்டனர்.

    ஈரானின் ஏவுகணைகளில் ஒன்று அமீரகத்தின் கடல் எல்லைக்கு வெளியே கடலில் விழுந்ததாகவும், மற்றொரு ஏவுகணை அமீரக கடற்பகுதியில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழப்போ, பெரிய அளவிலான சேதமோ ஏற்படவில்லை. இருப்பினும், கடல் போக்குவரத்தை குலைக்கும் வகையில் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அமீரகம் சந்தேகிக்கிறது. அதேநேரம் தாங்கள் அமீரகம் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

    Advertisement

    அமீரகம் அதிரடி

    ஆனாலும், ஈரான் சொல்வதை அமீரகம் நம்புவதாக இல்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஈரானுடன் அனைத்து வர்த்தகம் மற்றும் நிதி நடவடிக்கைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அமீரகம் அறிவித்துள்ளது. அரசியல் ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமீரகத்திற்கும் ஈரானுக்கும் இடையே நீண்டகாலமாக வர்த்தக உறவுகள் இருந்து வருகின்றன. குறிப்பாக துபாயில் உள்ள நிறுவனங்கள் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து வந்தன. இந்தச் சூழலில் தான் அமீரகம் வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

    Advertisement

    குற்றச்சாட்டு

    இதற்கு முன்பும் ஹார்முஸ் ஜலசந்தியில் அபுதாபியை சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடைய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமீரகம் குற்றம்சாட்டியிருந்தது. கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி 2 கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் மேலும் ஒரு கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அமீரகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், இது சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிக பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

    இந்த தாக்குதல்களை தொடர்ந்தே அமீரகம் இப்போது ஈரான் உடனான வர்த்தகத்தை முடக்கியுள்ளது. இதனால் அமீரகம் ஈரான் இடையே நேரடியாக போர் வெடிக்கும் சூழலும் உருவாகியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாக போர் வெடித்தால் அது பிராந்திய போராக மாறும். ஏற்கனவே வளைகுடா பற்றி எரியும் நிலையில், இது சூழலை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது.

    Advertisement

    அடுத்து என்ன

    இதன் காரணமாகவே வளைகுடாவில் அடுத்த சில நாட்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். அமீரகம் மீது அல்லது அந்நாட்டு கப்பல்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிறதா என்பதை பொறுத்தே நிலைமை இருக்கும். தாக்குதல்கள் தொடரவில்லை என்றால் நிலைமை மெல்ல கட்டுக்குள் வரும். ஆனால், தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலுக்கு அமீரக ராணுவமும் நேரடியாக களமிறங்கும். இது பிராந்தியத்தில் பதற்றத்தையே ஏற்படுத்தும்.

    English Summary

    UAE has suspended all trade and financial activities with Iran(அமீரகம் ஈரான் இடையே வெடிக்கும் மோதல்): Middle east tension is reaching new High as UAE Iran conflict raises.