இரவு முழுக்க போனை சார்ஜில் போடுறீங்களா? மின் வாரியம் சொன்ன அந்த ஒரு விஷயம்

  • ஈரோடு: மொபைல் போன் மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மிக முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகளை ஈரோடு மாவட்ட மின் ஆய்வுத்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரங்களில் மொபைல் போன்களை சார்ஜரில் இணைத்தபடி தூங்குவதால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து மின் ஆய்வாளர் உசேன்பாஷா தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Advertisement

    இப்போதெல்லாம் போன் இல்லாத மனிதர்களே இல்லை என்ற நிலைமை வந்துவிட்டது. ஆனால், அந்த செல்போனை நாம் பயன்படுத்தும் முறையிலும், அதனை சார்ஜ் செய்யும் விதத்திலும் தான் நம்முடைய உயிர் பாதுகாப்பே அடங்கியுள்ளது என்று சுட்டிக்காட்டுகிறார்கள் மின் ஆய்வுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    Advertisement

    ஈரோடு மாவட்ட மின் ஆய்வுத்துறை

    ஈரோடு மாவட்ட மின் ஆய்வுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் மின் விபத்துகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் இப்போது வெளியிட்டுள்ளனர்.

    நம்மில் நிறைய பேருக்கு இரவு தூங்க செல்லும்போது செல்போனை சார்ஜரில் போட்டுவிட்டு தூங்கும் பரவலாக இருக்கிறது. விடிவதற்குள் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும், மறுநாள் பயன்பாட்டிற்கு வசதியாக இருக்கும் என்ற பொதுமக்களின் இந்த அலட்சியமான போக்கே மிகப்பெரிய மின் விபத்துகளுக்குக் காரணியாக அமைகிறது என்று தமிழ்நாடு மின் ஆய்வுத்துறையின் ஈரோடு மின் ஆய்வாளர் உசேன்பாஷா தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மின்சார வாரியம் அட்வைஸ்

    அதனால் பொதுமக்கள் எந்த காரணம் கொண்டும் இரவு நேரங்களில், குறிப்பாக தாங்கள் தூங்கும்போது மொபைல் போன் உள்ளிட்ட எந்தவொரு மின் சாதனங்களையும் சார்ஜ் செய்யக் கூடாது என்று அவர் தனது செய்திக்குறிப்பில் வலியுறுத்தியுள்ளார்..

    நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, மின் சாதனங்கள் அதிக வெப்பமடைந்து (Overheating) வெடிப்பதற்கோ அல்லது மின் கசிவு (Short Circuit) ஏற்பட்டு தீ விபத்து உருவாவதற்கோ அதிக வாய்ப்புகள் உள்ளன. தூக்கத்தில் இருக்கும்போது இத்தகைய விபத்துகள் நேர்ந்தால், அதனை உடனடியாகக் கவனித்துத் தப்பிக்க முடியாமல் பெரும் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் இந்த பழக்கத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Advertisement

    எர்த் அடிக்கும் அபாயம்

    அதேபோல் மார்க்கெட்டில் மலிவான விலையில் கிடைக்கும் தரம் இல்லாத மற்றும் போலியான சார்ஜர்களை (Fake Chargers) பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்துவதைத் தவித்திட வேண்டும் என மின் ஆய்வுத்துறை எச்சரித்துள்ளது.

    முறையான நிறுவனங்களின் தயாரிப்புகள் பழுதடையும்போது, தற்காலிக தீர்வாக போலியான மின் சாதனங்களை பயன்படுத்துவது மின் விபத்துகளை நேரடியாக வரவேற்பதற்கு சமம் ஆகும். அதுமட்டுமல்லாமல் வீடுகளில் மின் சாதனங்களை இணைக்கும் பிளக் சாக்கெட்டுகளில் (Plug Sockets) முறையான "எர்த்" (Earth Connection) எனப்படும் புவித்தடுப்பு இணைப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

    இந்த எர்த் இணைப்பு சரியாக இல்லாத பட்சத்தில், மின் கசிவு ஏற்படும் போது மின் சாதனங்களைத் தொடும் மனிதர்களுக்குக் கடுமையான ஷாக் அடிக்கும் அபாயம் உள்ளது.

    Advertisement

    ஈரத்துணிகள் - ஸ்விட்ச் போர்டுகள்

    பொதுமக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் செய்யும் இன்னொரு ஆபத்தான விஷயம், ஈரமான துணிகளைக் கொண்டு சுவிட்ச் போர்டுகளையோ அல்லது மின்சார உபகரணங்களையோ சுத்தம் செய்வதாகும்.. ஈரப்பதம் இருக்கும் இடத்தில் கரண்ட் மிக வேகமாகப் பாயும் என்பதால், எந்தவொரு மின் சாதனத்தையும் ஈரத்துணியால் துடைக்கக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    வீடுகளில் நீண்ட நாட்களாக இருக்கும் பழுதடைந்த, பழைய மின் ஒயர்கள் மற்றும் கம்பிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். காலாவதியான ஒயர்கள் எந்த நேரத்திலும் உருகி, தீ விபத்தை ஏற்படுத்தக்கூடும்.

    சிறுவர்கள், குழந்தைகள் ஜாக்கிரதை

    அதேபோல சிறுவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் எவ்வித மின் சாதனங்களையும் வைக்கக் கூடாது. சுவர்களில் உள்ள பிளக் பாயிண்ட்டுகளையும் குழந்தைகள் தொடும் உயரத்தில் அமைக்கக் கூடாது. அவர்கள் அறியாமல் மின் இணைப்புகளில் கைகளை வைத்தால் ஏற்படும் விளைவுகள் ஆபத்தாய் முடிந்துவிடும்..

    Advertisement

    அதனால் மின்சாரப் பயன்பாட்டில் இந்த எளிய பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் துல்லியமாகக் கடைப்பிடித்தால் மட்டுமே மின் விபத்துகளற்ற பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்ய முடியும் என்று ஈரோடு மின் ஆய்வாளர் உசேன்பாஷா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    English Summary

    Electricity Board Issues Urgent Warning: Can Charging Your Phone Overnight Cause an Electric Shock?