ஈரோடு ஆசனூரில் யானைகளுக்கு. அதிர்ஷ்ட விருந்து.. இரவோடு இரவாகக் கரும்பு காலி

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில், பழுதாகி நின்ற கரும்பு லாரியிலிருந்து காட்டு யானைகள் இரவு முழுவதும் கரும்புகளைக் கட்டுக்கட்டாக எடுத்து ருசித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Advertisement

    தாளவாடி, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மலைப்பகுதிகளிலிருந்து சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கரும்பு ஆலைக்குத் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கரும்புகள் கொண்டு செல்லப்படுகின்றன.

    Advertisement

    இவ்வாறு செல்லும் கரும்பு லாரிகளை வனப்பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி வழிமறித்து, லாரிகளிலுள்ள கரும்புகளை எடுத்து ருசித்து வருகின்றன. இதனால் கரும்பு லாரி ஓட்டுநர்கள் அச்சத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தாளவாடியை அடுத்த ஆசனூர் வனப்பகுதியில் கரும்பு ஏற்றிச்சென்ற லாரி ஒன்று பழுதாகிச் சாலையோரத்தில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் அங்கு வந்த காட்டு யானைகள், லாரியைச் சுற்றிவளைத்து, அதிலிருந்த கரும்புகளைக் கட்டுக்கட்டாக இழுத்துச்சென்று ருசித்துள்ளன. லாரி பழுதாகி நின்றது ஓட்டுநருக்குச் சோதனை என்றால், யானைகளுக்கோ அது 'அதிர்ஷ்ட விருந்து' ஆகிவிட்டது!

    அப்போது அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர், யானைகள் கரும்புகளை அள்ளி அள்ளிச் சாப்பிடும் காட்சியைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.

    Advertisement

    கரும்பு லாரிகளை காட்டு யானைகள் தொடர்ந்து வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், வனப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    பொதுவாக யானைகளுக்கு கரும்பு ஏற்றி வரும் லாரிகள் , கரும்பு வரி என்ற பெயரில் கப்பு கட்டியை செல்ல வேண்டிய நிலை உள்ளது. கரும்பு லாரி எத்தனை கிலோமீட்டர் தூரத்திலிருந்து வந்தாலும் அதை வாசனையில் எளிதாக யானைகள் கண்டுபிடித்து விடும். சரியாக அந்த வாசனையை தேடி யானைகள் வளைவு பகுதியில் வந்து நிற்கும். அப்போது லாரியை வேகமாக ஓட்டாமல் கரும்புகளை எடுக்கும் அளவிற்கு மெதுவாக லாரி ஓட்டுனர்கள் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஒரு கட்டு கரும்பை லாரி ஓட்டுனர்களே கீழே போட்டுவிட்டு அதன் கவனத்தை திசை திருப்பி செல்ல வேண்டும். அப்படி செல்லாமல் தப்பிக்க முயற்சித்தால் யானைகள் ஆக்ரோஷமடைந்து தாக்கத் தொடங்கிவிடும். இதற்காகவே யானைக்கு கரும்புகளை போட்டுவிட்டு தான் செல்வார்கள் . இந்த சூழலில் லாரி பழுதடைந்ததால் மொத்த கரும்புகளும் யானைகளுக்கு விருந்தாக கிடைத்துள்ளது.

    English Summary

    Erode Asanur: A Lucky Feast for Elephants as Sugarcane Lorry Breaks Down Overnight