சுடுகாட்டில் இடம் மறுப்பு.. காலில் விழுந்து கதறிய தலித் மக்கள்.. வன்னி அரசு இதுவரை வாய் திறக்கலையே

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுடுகாட்டில் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, தலித் மக்கள் காலில் விழ வைக்கப்பட்ட கொடுமை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இணையத்தில் வெளியான இந்த வீடியோவுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், சமூக நீதித்துறை அமைச்சராக இருக்கும் விசிக-வின் வன்னியரசு இந்த விவகாரத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதி காப்பது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    எதிர்க்கட்சியாக இருந்தபோது முழங்கிய குரல்

    திமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சி வரிசையில் நின்றபோதும், கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்தபோதும் சரி, தலித் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் முதல் ஆளாகக் குரல் கொடுத்தவர் வன்னியரசு. மேடைதோறும் முழங்கி, 'தலித் மக்களின் பாதுகாப்பு அரண் நாங்கள் தான்' என்று பேசி வந்தவர்.

    Advertisement

    எங்கு ஒரு சாதிய அநீதி நடந்தாலும் உடனடியாகக் கண்டன அறிக்கை வெளியிடுவது, களத்திற்கு ஓடிச் சென்று போராட்டம் நடத்துவது, அரசுக்கு எதிராகக் கேள்விகளை அடுக்குவது என எப்போதும் பரபரப்பாக இயங்கியவர் அவர். ஆனால், இப்போது அவரே சமூக நீதித்துறைக்கு அமைச்சரான பிறகு, அதே போன்றதொரு கொடூரச் சம்பவம் நடந்தும் அமைதி காப்பது ஏன் என்ற கேள்விதான் இப்போது தமிழக அரசியல் களத்தில் எதிரொலிக்கிறது.

    ஈரோட்டில் நடந்தது என்ன?

    பெருந்துறை அருகே உள்ள பெரும்பள்ளி கிராமத்தில் 90 வயது முதியவர் சென்னி காலமானார். அவரது உடலை ஊர் பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய முயன்றபோது, அங்குள்ள சிலர் வழிமறித்து கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். "இங்கு அடக்கம் செய்தால் இனி உங்களுக்கு வேலை தரமாட்டோம்" என வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் மிரட்டல் விடுத்தனர்.

    Advertisement

    வேறு வழியின்றி, அந்த முதியவரின் உறவினர்கள் இருவர் நிலத்தில் விழுந்து கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்த மனிதநேயமற்ற செயல் அரங்கேறியதாகக் கூறப்படுகிறது. இறுதியில் பலத்த பாதுகாப்புடன் தான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

    ஈரோட்டில் கொடூரம்! சுடுகாட்டில் இடம் மறுப்பு.. காலில் விழுந்து கெஞ்சிய தலித் மக்கள்! விஜய் மௌனம்!

    பதவி வந்ததும் மாறிப்போன நிலைப்பாடா?

    தலித் மக்களுக்காகப் பேச வேண்டிய அதே சமூக நீதித்துறை இப்போது வன்னியரசுவின் பொறுப்பில் இருக்கிறது. ஆனால், தங்களின் சொந்த மக்கள் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோ நாடு முழுவதும் பரவி நாள்கள் ஆகியும், அமைச்சர் வன்னியரசுவிடமிருந்து ஒரு சிறு கண்டன அறிக்கை கூட வரவில்லை.

    Advertisement

    "அன்று அதிகாரத்தில் இல்லாதபோது உரிமை முழக்கம் போட்டவர், இன்று அமைச்சர் பதவி கையில் கிடைத்ததும் அமைதியாகிவிட்டாரா? பதவி சுகம் மக்களைப் பற்றிய அக்கறையை மறக்கடித்துவிட்டதா?" என பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அரசியல் லாபமா? மக்கள் நலனா?

    சமூக நீதியைப் பேசும் தலைவர்கள் அரசுப் பொறுப்புக்கு வந்த பிறகு, ஆளும் அமைப்பின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அடக்கி வாசிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உண்டு. அந்தப் பட்டியலில் இப்போது வன்னியரசுவும் இணைந்துவிட்டாரா என்று தலித் அமைப்புகளும் களப் போராளிகளும் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

    Advertisement

    சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவோ, தவறிழைத்தவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடவோ துறை அமைச்சர் முன்வராதது மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    உரிமைக்காகப் போராடி அடையாளத்தைப் பெற்று, அதன்மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், அந்த எளிய மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது மௌனம் காப்பது மிக ஆபத்தானது. ஈரோடு சம்பவத்தில் இனியும் அமைதியாக இருக்காமல், அமைச்சர் வன்னியரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக உடனடியாகக் களம் இறங்கி நியாயம் பெற்றுத் தருவாரா என்பதைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    English Summary

    Erode Burial Row: Why Is Social Justice Minister Vanni Arasu Silent? Outrage Over VCK Leader's Silence