மாமியாரை சரியாக கவனிக்கலையா? ஈரோடு அரசு மருத்துவமனையில் மாமனாரை கத்தியுடன் விரட்டிய மருமகன்

  • ஈரோடு: ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக்குத்தில் முடிந்துள்ளது. மாமியாரை சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்ற பிரச்சனையில், மாமனாரை மருமகன் கத்தியால் சரமாரியாகக் குத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும் இவரது மருமகன் ஆரோக்கியம் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே குடும்பப் பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    Advertisement

    ஈரோடு அரசு மருத்துவமனை

    இந்த நிலையில், வடிவேலின் மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அப்போது, மனைவியை பராமரிப்பது தொடர்பாக வடிவேலுக்கும் அவரது மருமகன் ஆரோக்கியத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    ஏற்கனவே இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்த நிலையில், இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமனார் வடிவேலை சரமாரியாக குத்தி விட்டார்..

    கழுத்து, முதுகில் கத்திக்குத்து

    இந்தத் தாக்குதலில் வடிவேலின் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அவர் வலியால் அலறியுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்ட மருத்துவமனை ஊழியர்களும் அங்கிருந்த பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து அவரை மீட்டுள்ளனர்.

    Advertisement

    இதையடுத்து, வடிவேல் அதே அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருமகனை சுற்றி வளைப்பு

    மருத்துவமனை வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்ததால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையே, சம்பவம் நடந்ததும் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் தப்பியோட முயன்ற ஆரோக்கியத்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

    நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் அதிகளவில் வந்து செல்லும் அரசு மருத்துவமனையில், பட்டப்பகலில் இப்படி கத்தியால் குத்திய சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமியாரைப் பராமரிப்பது தொடர்பான வாக்குவாதம் மட்டும்தான் இந்தத் தாக்குதலுக்குக் காரணமா, அல்லது ஏற்கனவே இருந்து வந்த குடும்பப் பிரச்சனையும் இதற்குக் காரணமா என்பது குறித்து விசாரணையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

    Advertisement

    தமிழக அரசு மருத்துவமனைகள்

    குடும்ப பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்திருந்தாலும், மக்கள் அதிகளவில் வந்து செல்லும் அரசு மருத்துவமனையின் பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே, 4 நாட்களுக்கு முன்பு நெல்லை அரசு மருத்துவமனையின் கழிவறையில் கைதி ஒருவர் தனது லுங்கியால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

    இப்போது ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பட்டப்பகலில் கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. நோயாளிகள், அவர்களது உறவினர்கள் என்று நிறைய பேர் வந்து செல்லும் மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்கு இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

    Advertisement

    சட்டம் ஒழுங்கு தொடர்பான கேள்விகளுடன், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எப்படி என்ற விவாதமும் எழுந்துள்ளது...!!

    English Summary

    Erode Hospital Attack.. Son-in-Law Chases Father-in-Law With Knife Over Mother-in-Law Care Dispute