ஈரோடு: திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகுவதாக அறிவித்துள்ளார். ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்சியில் இருந்தும் விலகும் முடிவை அவர் எடுத்துள்ளார். அவருடைய இந்த முடிவு திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2021 இல் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் இணைந்தார். சில நாட்களுக்கு முன்பு ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து தோப்பு வெங்கடாசலம் நீக்கப்பட்ட நிலையில், திமுகவில் இருந்து விலகும் முடிவை அறிவித்துள்ளார். யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தோப்பு வெங்கடாசலம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த பத்து ஆண்டுகாலம் இந்த பெருந்துறை தொகுதியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்கை ஆற்றியிருக்கிறேன். ஐந்தாண்டு காலம் பெருந்துறை தொகுதிக்கு முழுமையாகப் பணியாற்றி இருக்கிறேன். ஈரோடு மாவட்டத்தைப் பொருத்தவரையில் 5 ஆண்டுகாலம் அமைச்சராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். ஈரோடு மாவட்ட மக்கள் ஊராட்சிக்கோட்டை குடிநீரை குடிக்கிறார்கள் என்றால் அதில் எனது பங்கும் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்டு பதவியை வைத்து மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்கிற சிந்தனையோடும், கொள்கையோடும் வாழ்ந்திருக்கிறேன். பெருந்துறை தொகுதியைப் பொருத்தவரை அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது போடப்பட்ட சாலைதான் இன்று பயன்பாட்டில் உள்ளது. இந்த ஐந்தாண்டு காலத்தில் பெருந்துறை தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக உள்ளது. பெருந்துறையில் நாம் கொண்டு வந்த திட்டங்கள் குறிப்பாக பல இடங்களில் சாலைகள் மோசமாக இருக்கிறது. பெருந்துறை - சென்னிமலை சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று கடந்த காலத்தில் முதல்வரிடம் கோரிக்கை வைத்த நிலையில், நிதி ஒதுக்கினார்கள். ஆனால், அந்தப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் ஈரோடு வந்தபோது அவரிடம் கோரிக்கை வைத்ததையடுத்து பெருந்துறை தொகுதிக்கு ரூ. 6 கோடி மதிப்பில் வட்டார வளர்ச்சி போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கு உத்தரவிட்டார். அந்த அலுவலகத்திற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது. பெருந்துறையின் மையப் பகுதியில் அதற்கான இடத்தை தேர்வு செய்து கொடுத்தேன். ஆனால், அப்போது அந்த இடத்தை மாறுதல் செய்து ஈரோடு சாலை செல்லக்கூடிய தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் அந்த அலுவலகத்தை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன். இதையடுத்து மாவட்டத்தின் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்துப் பேசுமாறும், அதற்கான முயற்சியை அவர் எடுப்பார் என்று கூறினேன். தற்போது மாற்று இடம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் 90 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் செய்யப்பட்டது. திமுகவில் சேர்த்த பின்னர் இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அந்த திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கான தொடக்க விழாவுக்கு கூட என்னை அழைக்கவில்லை. இந்த திட்டத்தில் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 6 பஞ்சாயத்துகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிடப்பட்டது. ஆனால், அந்த 6 ஊராட்சிகளுக்கும் திட்டம் சென்று சேரவில்லை. அதிமுகவில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவுக்கு வந்தாலும் கூட, என்னால் கொண்டு வரப்பட்ட கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், நான் கோரிக்கை வைத்த அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற ஆசையின் காரணமாக திமுகவுக்கு வந்தேன். ஆனால், அந்த திட்டங்களில் இப்போதும் கூட இன்னும் சில குறைகள் உள்ளது. சென்னிமலை பகுதிகளில் விடுபட்ட பஞ்சாயத்துகளுக்கு தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இவை எல்லாமே எனக்கு மனநிறைவு தான். திமுகவில் இருந்த காலத்தில் ஸ்டாலின் என் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை வைத்திருந்தார். அவர் மீது நானும் அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறேன். அவருக்கும், எனக்குமான அன்பிலும், பாசத்திலும் எந்தவிதமான குறைகளும் கிடையாது. ஆனாலும் கூட தொடர்ந்து திமுகவில் என்னால் பயணிக்க முடியாத சூழ்நிலையில் அந்த இயக்கத்தில் இருந்து விலகும் முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்வதற்கு விரும்பவில்லை. அரசியலை அரசியலுக்காக மட்டும் பயன்படுத்தும் அரசியல்வாதி நான் இல்லை. எதிர்காலத்திலும் பெருந்துறை தொகுதியின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும் வகையில் எனது பணிகள் இருக்கும். திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும், அனைத்து நிலைகளில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை தலைமைக்கு அனுப்புகிறேன். மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி, பெருந்துறை தொகுதி வேட்பாளராகவும் வாய்ப்பு வழங்கியதற்கு நெஞ்சார்ந்த நன்றி. திமுகவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இனியும் திமுகவில் தொடர முடியாது என்பதால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இப்போதைக்கு எந்த இயக்கத்திற்கும் செல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போதைக்கு வேறு இயக்கத்திற்கு செல்ல முயற்சிக்கவில்லை. முன்னாள் அமைச்சர் முத்துசாமி மீது எவ்வித குற்றச்சாட்டையும் கூறவில்லை. இறந்த காலத்தை குறைகூறாமல் நிகழ்காலத்தை தொடர விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.பின்தங்கிய பெருந்துறை தொகுதி
ஆர்டிஓ அலுவலகம்
அதிமுகவில் மனக்கசப்பு
குறை சொல்ல விரும்பவில்லை
திமுகவில் இருந்து விலகுகிறேன்