அதிமுகவில் இருந்து 15 எம்எல்ஏ வெளியில் வர ரெடியா இருக்காங்க.. ஆதரவாளர்களிடம் சொன்ன செங்கோட்டையன்!

  • ஈரோடு: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 15 பேர் வெளியில் வர இருக்கிறார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் தோல்விக்கு பின், அதிருப்தி எம்எல்ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளதாக கூறிய செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியில் இருந்து நீக்கியதால் தான் மக்கள் பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்ற மரகரம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். இதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா இருவரும் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டனர்.

    Advertisement

    இதனால் அடுத்த இடைத்தேர்தல் எப்போது வரும் என்பதே தவெக நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கின்றனர். இதனால் மீண்டும் அதிமுகவில் ஒரு பிரிவு வெளியேறும் என்ற பேச்சுகள் எழுந்துள்ளன.

    அதேபோல் அதிமுகவில் இருந்து வருவோரை தவெக வரவேற்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், விரைவாக அதிமுகவில் இருந்து 15 பேர் வெளியில் வரப் போகிறார்கள். இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியுமா என்று தெரியவில்லை.

    Advertisement

    நேற்று கூட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். என்ன நடக்கப் போகுதுனு எனக்கு தெரியவில்லை.. நல்ல வேளையாக எடப்பாடி பழனிசாமி என்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டார். தப்பித்து வந்து இங்கு வருவாய் துறை அமைச்சராக பணியாற்றி கொண்டிருக்கிறேன். இல்லையென்றால் நானும் முன்னாள் அமைச்சராக இருந்து வாயை பார்த்து கொண்டிருந்திருக்க வேண்டும்.

    அதிலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உட்கார வைத்துவிட்டார்கள். நான் எங்கு இருக்கிறேன் பார் என்று சொல்லும் வகையில், அவருக்கு எதிராக உட்கார்ந்து இருக்கிறேன். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பின் விஜய்யை போல் ஒருவரை பார்த்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். செங்கோட்டையனின் பேச்சின் மூலமாக அடுத்தக் கட்டமாக அதிமுக எம்எல்ஏ-க்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English Summary

    Sengottaiyan: Minister Sengottaiyan Claims 15 Edappadi Palaniswami Backed MLAs Preparing to Exit After By-Poll Setback