பெண்களை முடமாக்கும் ஆன்லைன் வர்த்தகம்.. மக்களை ஏமாற்றும் கார்ப்பரேட்! வணிகர்கள் பகீர் புகார்!

  • ஈரோடு: வணிகர்களைப் பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் எனவும், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலமாக பெண்களை வீட்டில் முடமாக்குகிறது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா கூறியுள்ளார். மேலும், பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது. ஈரோடு வீரபத்திர வீதியில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

    Advertisement

    அப்போது பேசிய அவர்," ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே கடைகள் நடத்தி வரும் மார்க்கெட் பகுதிகளை வணிகர்களுக்கே புதுப்பித்துத் தர வேண்டும். சாலை ஓரங்களிலும் முறையான அனுமதியின்றியும் செயல்படும் வாரச் சந்தைகளை முழுமையாக முறைப்படுத்த வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும்.

    ஈரோடு நகரின் வளர்ச்சிக்கேற்ப புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தமிழக முதல்வரிடம் மனுவாக அளிக்கப்பட உள்ளன. தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தின் அத்துமீறல்களால் சாமானிய வணிகர்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

    Advertisement

    எனவே சிறு வணிகர்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் இணைந்து சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும். வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறவுள்ள அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. வணிகர்களுக்கான சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்படாவிட்டால் நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டம் அறிவிக்கப்படும்.

    அதேபோல் வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல அடுக்கு ஜிஎஸ்டி வரிகளைக் குறைத்து ஒரே நாடு ஒரே வரிஎன்ற அடிப்படையில் ஒருமுனை வரியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் வைப்பதில் வணிகர் பேரமைப்பிற்கு முழு உடன்பாடு உண்டு.

    Advertisement

    பெருநிறுவனங்கள் தங்களின் ஆதிக்கத்தால் ஆங்கிலப் பெயர்களை முன்னிறுத்துவதைத் தடுத்து தமிழில் பெயர்ப்பலகை வைக்க வணிகர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள். பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த டோல்கேட் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்கள் போலி சலுகைகள் மூலமாகவும் எடைக் குறைப்பு மூலமாகவும் மக்களை ஏமாற்றி வருகின்றன. மேலும் இணையவழி வர்த்தகமானது பொதுமக்களின் அன்றாட நடமாட்டத்தைக் குறைத்து உடலாரோக்கியத்தையும் பாதிக்கிறது.

    எனவே ஆன்லைன் வர்த்தகத்திற்கு முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். வரும் எட்டாம் தேதி தமிழக நிதியமைச்சரைச் சந்தித்து வணிகர் நல வாரியக் குடும்ப நல நிதியை ஐந்து லட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கக் கோரிக்கை வைக்க உள்ளோம்" என்றார்.

    English Summary

    Tamil Nadu traders demand a special protection law, tighter online commerce rules and GST reforms to safeguard small businesses.