ஈரோடு தாளவாடியில் நாளை முதல் சாம்ராஜ்நகர் சாலையில் 4 மற்றும் 6 சக்கர வாகனங்களுக்கு தடை

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நாளை முதல் சாம்ராஜ்நகர் சாலையில் 4 மற்றும் 6 சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் இருவழியாக செல்ல அனுமதிக்கப்படும். நான்கு சக்கரம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லையோரம் அமைந்துள்ள தாளவாடி வழியாகவே கனரக வாகனங்கள் கர்நாடாகவிற்கு செல்கின்றன. கர்நாடகா வாகனங்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றன. சத்தியமங்கலம், பண்ணாரியை கடந்து சுமார் 48 கிமீ மலைப்பாதை வழியாக மைசூர், மற்றும் பெங்ளூருக்கு கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட கொங்கு பகுதி வாகனங்கள் கர்நாடகா செல்கின்றன. இந்த பாதையில் அடிக்கடி வாகனங்கள் பழுதாகி நிற்பதால் நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஈரோடு மாவட்டம், தாளவாடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திரு. சரவணன் தலைமையில் வணிகர்கள், விவசாய சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள், அனைத்து கட்சியினர், காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தாளவாடி பகுதியில் அன்றாடம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    இதன் அடிப்படையில், நாளை (செப்டம்பர் 10) காலை 6 மணி முதல் தாளவாடியில் இருந்து சாம்ராஜ்நகர் செல்லும் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழித்தடத்தில் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் மட்டும் இருவழியாக செல்ல அனுமதிக்கப்படும். நான்கு சக்கரம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    அதேபோல், சாம்ராஜ்நகரில் இருந்து தாளவாடி நோக்கி வரும் வாகனங்கள் அரசு கலைக்கல்லூரி வழியாக ஓசூர் கிராமம் செல்லும் சாலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓசூர் கிராமம் வழியாக செல்லும் சாலை இருவழிப்பாதையாக செயல்படும்.

    இந்த புதிய போக்குவரத்து மாற்றம் பாரதிபுரம், ராமாபுரம் மற்றும் சேசன்நகர் கிராம மக்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய போக்குவரத்து விதிமுறைகள் நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வருவதால், தாளவாடி பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை கடைப்பிடித்து, அறிவிக்கப்பட்ட மாற்று வழித்தடங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    English Summary

    A ban on four- and six-wheeled vehicles will be imposed starting tomorrow on the Chamarajanagar Road in Thalavadi, Erode district. Only school vehicles, two-wheelers, and three-wheelers will be permitted to travel in both directions on this route.