ஈரோடு: பெருந்துறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமார் மட்டும் சீட் கொடுக்க கூடாது என்று தவெக நிர்வாகிகள் அமைச்சர் செங்கோட்டையனிடம் தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இதனால் ஜெயக்குமார் அச்சத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு 70,302 வாக்குகள் பெற்று 9,693 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயக்குமார். இவர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 2 வாரங்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகினார். தலைமைச் செயலகத்தில் பதவியை ராஜினாமா செய்த அடுத்த 5 நிமிடங்களில், தவெகவில் இணைந்தார்.
தலைமைச் செயலகத்தில் வைத்தே தவெகவில் இணைக்கப்பட்டார். ஜெயக்குமார் ராஜினாமா செய்யப்பட்டதன் பின்னணியில் செங்கோட்டையன் இருப்பதாக சொல்லப்பட்டது. அதேபோல் இடைத்தேர்தலில் மீண்டும் ஜெயக்குமாருக்கு சீட் கொடுக்கவும் தவெக தலைமை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. நாளுக்கு நாள் விஜய்யின் இமேஜ் கூடி வருவதால், ஜெயக்குமார் இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பிக்கையாக இருந்தார். ஆனால் பெருந்துறை தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமாருக்கு எதிராக தீவிரமாக களமிறங்கி இருக்கின்றனர். அதிமுகவுக்கு துரோகம் இழைத்தவர் ஜெயக்குமார் என்று ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் ஜெயக்குமார் அப்செட்டில் இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஜெயக்குமாருக்கு எதிராக தவெகவினரும் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். பெருந்துறை இடைத்தேர்தலில் ஜெயக்குமாருக்கு சீட் கொடுக்க கூடாது என்று சில முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் செங்கோட்டையனை நேரடியாக பார்த்து வலியுறுத்தியுள்ளனர். வேறு யாருக்கு வேண்டுமானாலும் சீட் கொடுக்கலாம்.. ஆனால் அவருக்கு சீட் கொடுக்க கூடாது என்றும், அதையும் மீறி சீட் கொடுத்தால், நாங்கள் பணியாற்ற மாட்டோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஒரு நிமிடம் செங்கோட்டையனே ஆடிப் போயிருக்கிறார். இதன் காரணமாக பெருந்துறை இடைத்தேர்தலில் மீண்டும் தனக்கு விஜய் சீட் கொடுப்பாரா என்ற சந்தேகத்துடன் ஜெயக்குமார் இருந்து வருகிறார். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தது தவறான முடிவாகிவிட்டதோ என்றும் புலம்ப தொடங்கி இருக்கிறார்.