ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் மாவட்ட கலெக்டர்.. வான்மதி ஐஏஎஸ் சாதனை பின்னணி

  • ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த வான்மதி என்பவர் காலையில் பள்ளிக்கு போய்விட்டு வந்து, மாலையில் ஆடு மேய்த்து வந்தார்.. அப்படி ஆடு, மாடு மேய்த்து வந்த அவர், பட்டப்படிப்பு படித்தார். தொடர்ந்து முதுகலைப்படிப்பும் படித்தார், இறுதியாக ஐஏஎஸ் தேர்வுக்கு தயாரானார். கடினமாக படித்து உயர்ந்து இந்திய அளவில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் வர்தா மாவட்ட கலெக்டராக வான்மதி பணியாற்றி வருகிறார்.

    Advertisement

    கல்வியால் வாழ்க்கையில் பெரிய உயரத்தை அடையலாம் என்பது விதி..இது தான் இன்றைக்கு தமிழ்நாட்டில் பலர் செய்திருக்கிறார்கள். இளமையில் வறுமையை அனுபவித்ததவர்கள், அந்த வறுமையிலும் கல்வியை விடாமல் பிடித்தவர், அந்த கல்வியை அடுத்து கட்டத்திற்கு கொண்டு சென்று, ஐஏஎஸ், ஐபிஎஸ், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போன்ற உயர் அதிகாரிகளுக்கான தேர்வில் பங்கேற்றவர்கள் ஜெயித்திருக்கிறார்கள். ஒருவரோ இருவரோ அல்ல.. பலர் வறுமையை கல்வியால் வென்று சாதித்திருக்கிறார்கள். 2000களில் மதுரை மாவட்டத்தில் பரோட்டோ கடையில் சப்ளையராக வேலை பார்த்து படித்த வீரபாண்டியன் கலெக்டராக இருக்கிறார்.

    Advertisement

    அதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள செங்குவார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவர் ஆவார். இவர் 2014-ஆம் ஆண்டு யூ.பி.எஸ்.சி தேர்வில் தமிழ் வழியிலேயே தேர்வெழுதி, அகில இந்திய அளவில் 45-வது இடத்தைப் பிடித்து தமிழ்நாட்டில் முதலிடத்தைப் பெற்று கலெக்டரானார். தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்ட கலெக்டராக நீண்ட காலம் இருந்தார். தற்போது சுற்றுலா துறையின் அதிகாரியாக இருக்கிறார்.

    அதேபோல் இன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக உள்ள சிவகுருபிரபாகரன் ஐஏஎஸ் இளமை வாழ்க்கையும் மிகவும் வறுமை நிறைந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டித்தெரு எனும் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்த சிவகுருபிரபாகரனின் தந்தை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், குடும்பம் மிகுந்த வறுமையில் வாடியது. தாயாரும், சகோதரியும் வயல்களில் வேலை பார்த்தும், பாய்கள் மற்றும் கூடைகள் முடைந்தும் குடும்பத்தைக் காப்பாற்றினர். குடும்பச் சூழல் காரணமாக சிவகுரு பிரபாகரனால் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டு, மர அறுவை ஆலை ஒன்றில் இரண்டு ஆண்டுகள் தொழிலாளியாகவும் வேலைக்கு சென்று வந்தார்.

    Advertisement

    பின்னர் குடும்பத்தின் வறுமையால் ஏற்பட்ட சுமை குறைந்த பிறகு, சிவகுருபிரபாகரன், வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளைச் செய்து தனது செலவுகளைச் சமாளித்தார். தொடர்ந்து, சென்னை ஐ.ஐ.டி-யில் சேர்ந்து எம்.டெக் முடித்தார். சென்னை ஐ.ஐ.டி-யில் படிக்கும் போது, தங்குவதற்கு இடமில்லாமல் பல நாட்கள் செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலைய நடைமேடைகளில் தூங்கி, தனது இலட்சியத்திற்காகக் கடுமையாக உழைத்தார்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணனை ரோல் மாடலாக கொண்டு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று விரும்பினார். யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து மூன்று முறை தோல்வியைச் சந்தித்தபோதிலும் மனம் தளராமல், நான்காவது முயற்சியில் 2018-ஆம் ஆண்டு இந்திய அளவில் 101-வது ரேங்க் பெற்று சாதனை படைத்தார். இன்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக உள்ளார். இப்படி பலர் ஐஏஎஸ்அதிகாரிகளாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களிலும் பணியாற்றுகிறார்கள்.

    Advertisement

    அப்படி ஒருவர் தான் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த வான்மதி. அவரது தந்தை ஒரு ஓட்டுநர். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாக, அவர் காலையில் பள்ளிக்கு சென்று நன்றாக படித்தார். மாலை பள்ளி முடிந்ததும், மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல், தனது குடும்ப ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டே படித்தார். அவர் பள்ளி படிப்பை முடித்தவுடன், திருமணம் குறித்து குடும்பத்தினர் பேச தொடங்கினார்கள்.

    ஆனாலும், அவரது குடும்பத்தாரின் உயர் கல்வி படிப்பேன் என்று உறுதியாக கூறினார். அவர்களுடம் ஒத்துழைத்தனர். இதனால் அவர் விடாமுயற்சியால் முதுகலை பட்டம் பெற்றார். இதோடு நிறுத்தாமல் கலெக்டர் படிப்பிற்காக தீவிரமாக தயாராக தொடங்கினார். இதற்காக அயராது உழைத்த அவர், தோல்விகளைக் கண்டு தொய்வடையவில்லை.. கடந்த 2015-ஆம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வில் 152-ஆவது இடத்தை பிடித்து அசத்தினார்.
    ஆடு, மாடு மேய்த்து கொண்டே படித்த வான்மதி, இன்று மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள வர்தா மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    English Summary

    Vanmathi, a girl who once grazed goats in Erode, has achieved a remarkable feat by securing the 152nd rank in the UPSC examination at the national level and becoming a District Collector in Maharashtra.