கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!


  • ஓசூர்: தமிழ்நாட்டில் பாதுகாப்புத் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) விமான அமைப்புகள் மையத்தை (Centre for Airborne Systems - CABS) ஓசூரில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்துள்ளார். இந்த முயற்சி பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில், விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இப்போது மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    Advertisement

    தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக DRDO-வின் இந்த CABS மையத்தை ஓசூருக்கு கொண்டு வருவதற்காக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில் டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது முதலமைச்சர் விஜய் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். DRDO தற்போது தனது உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள நிலையில், இந்த மையம் தமிழ்நாட்டுக்கு வருவது மாநிலத்தின் ஏரோஸ்பேஸ் துறைக்கு பெரும் பலத்தை அளிக்கும்.

    Advertisement

    DRDO-வின் CABS மையம், நெட்ரா Mk1A மற்றும் நெட்ரா Mk2 போன்ற வான்வழி கண்காணிப்பு விமானங்களை உருவாக்கும் முக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளது. ஒரு நெட்ரா விமானத்தை உருவாக்க மட்டும் சுமார் 2,000 கோடி ரூபாய் செலவாகும். இந்த சென்டர் ஓசூரில் அமைக்கப்பட்டால், உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாகும். மேலும், தமிழ்நாட்டின் ஏரோஸ்பேஸ் உற்பத்தித் துறை வலுப்பெறும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

    ஓசூரின் சாதகமான நிலை

    ஓசூர் பெங்களூரு ஏரோஸ்பேஸ் கிளஸ்டருக்கு அருகில் இருப்பதால், இந்த மையத்துக்கு ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே DRDO-வின் சில பரிசோதனை நடவடிக்கைகள் இப்பகுதியில் நடைபெற்றுள்ளன. தமிழ்நாடு தனது வலுவான உற்பத்தித் திறன், எலக்ட்ரானிக்ஸ் சுற்றுச்சூழல் மற்றும் வான்வழி உள்கட்டமைப்பை முன்னிலைப்படுத்தி இந்தத் திட்டத்தை ஈர்க்க முயன்று வருகிறது.

    Advertisement

    மத்திய அரசு தற்போது AMCA (Advanced Medium Combat Aircraft) திட்டத்தின் சில பகுதிகளை ஆந்திராவுக்கு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு CABS மையத்தைப் பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சென்டர் வந்தால், ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் உயர் தொழில்நுட்ப வளர்ச்சியை அடையும். இது இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும்.

    முதலமைச்சர் விஜய்யின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், தமிழ்நாடு தேசிய அளவில் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் முன்னணி மாநிலமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் முடிவை தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

    English Summary

    Tamil Nadu Chief Minister Vijay has strongly pitched for the DRDO’s Centre for Airborne Systems (CABS) to be set up in Hosur during his recent meeting with Prime Minister Narendra Modi. The project is expected to create high-tech jobs, boost the state’s aerospace ecosystem, and position Tamil Nadu as a major defence manufacturing hub.