ஓசூர்: ஓசூர் அருகே சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான "மெத்தம்பெட்டமைன்" போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு திருவள்ளூரை சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் அருகே, தனியார் ஆம்னி பேருந்தில் கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.6 கோடி ரூபாய் மதிப்பிலான 6 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்து ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் ரமேஷ் ஆகியோர் தமிழக - கர்நாடக எல்லையான ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், பழனி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்தை நிறுத்தி போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் வைத்திருந்த உடமைகளில் 'எம்.டி.எம்.ஏ' (MDMA) எனப்படும் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 6 கிலோ எடையுள்ள இந்த போதைப்பொருள் 6 பண்டல்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ 6 கோடியாகும். இவற்றை பறிமுதல் செய்த போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட ரகுவை உடனடியாக கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், பெங்களூருவின் மடிவாளா பகுதியில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு இந்த போதைப்பொருளை அவர் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது. இந்த கடத்தல் கும்பலின் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து சிப்காட் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் அண்மைக்காலமாக மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க போதை பொருள் தடுப்பு பிரிவினர் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார்கள். அத்துடன் போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சென்னையின் மண்ணடி பகுதியில் 800 கிராம் மெத்தபெட்டமைன் போதை பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். அது போல் கடந்த ஜூலை மாதம் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சோதனையில் 35 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகாவில் நைஜீரிய நாட்டவரிடம் இருந்து இந்த போதை பொருளை வாங்கி தமிழகத்தில் விநியோகித்ததாக 6 பேர் கொண்ட கும்பலை காவல் துறை கைது செய்தது. அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச கடல்வழியாக கடத்தப்பட்ட 6000 கிலோவுக்கு மேற்பட்ட மெத்தபெட்டமைன் பறிமுதல் தொடர்பான வழக்கையொட்டி என்ஐஏ, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 13 இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தியது. இதில் சென்னையில் மட்டும் ரூ 71 லட்சம் டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவ்வப்போது போதை பொருள் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து அவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.