ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பு! உயிரை பணயம் வைத்து தண்ணீரை சரி செய்த ஓசூர் பிளம்பர்!

  • ஓசூர்: ஓசூரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்த நிலையில் தனது உயிரை பணயம் வைத்து அதை சரிசெய்த பிளம்பருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

    Advertisement

    காவிரி ஆற்றுப் படுகையிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ராட்சதக் குழாய்கள் மூலம் ஓசூர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    Advertisement

    இந்நிலையில், ஓசூர் - பாகலூர் சாலையில் செல்லும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாயில் இன்று திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயிலிருந்து குடிநீர் சுமார் 10 அடி உயரத்திற்குச் சுழன்று பீய்ச்சியடித்தது.

    மழை போல் நீர் கொட்டியதால், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். ஒருகட்டத்தில் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டனர்.

    உடைப்பிலிருந்து பெருக்கெடுத்த நீரால் சாலையில் தண்ணீர் ஆறு போல் ஓடி வீணானது. அந்நேரத்தில், அப்பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க வந்த ஓசூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த முருகேசன் (45) என்ற பிளம்பர், தண்ணீர் வீணாவதைக் கண்டு வேதனையடைந்தார்.

    Advertisement

    துறை சார்ந்த அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல், உடனடியாக களத்தில் இறங்கி உடைப்பைச் சரிசெய்ய முயன்றார். நீர் அதிவேகமாக பீய்ச்சியடித்ததால் அவர் முழுவதுமாக நனைந்தபோதிலும், நீண்ட நேரம் போராடி குடிநீர் குழாய் உடைப்பைத் திறம்படச் சரிசெய்தார்.

    இதனால் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டு, அப்பகுதியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது. பிளம்பர் முருகேசனின் இந்த உடனடி சமூக அக்கறைச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

    பல பகுதிகளில் குடிநீருக்கு மக்கள் தவித்து வரும் நிலையில், பராமரிப்புக் குறைபாட்டால் இதுபோன்று லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணாவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Advertisement

    சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர்க் குழாய்களை அவ்வப்போது ஆய்வு செய்து பராமரித்தால், இதுபோன்ற குழாய் உடைப்புகளையும் தண்ணீர் வீணாவதையும் முன்கூட்டியே தடுக்க முடியும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த குழாய் உடைப்பை உயிரை பணயம் வைத்து சரி செய்தது என ஏன் சொல்கிறார்கள் என்றால், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டக் குழாய்கள் மிகவும் பெரியதாக இருக்கும். இதில் இருந்து வரும் அழுத்தம், ஒரு ராக்கெட்டை போல அதிகவேகத்தில் பீய்ச்சியடிக்கும்.

    இந்த ஃபோர்ஸ் அருகே செல்பவர்களை தூக்கி அடிக்கும் அளவுக்கு ஆபத்தானது. மேலும் அந்த தண்ணீரில் நனைத்தபடியே சரி செய்ய வேண்டியிருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    English Summary

    Hosur Plumber take his life risk and repaired Hogenakkal water pipeline burst. He was praised by public as lakhs of litres are saved by him.