ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ரூ.6 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், பெங்களூருவில் தங்கியிருந்த இருவரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த மாதம், ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவரை போலீசார் சோதனை செய்தபோது, அவரிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகிறது.
சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான அந்த போதைப் பொருள் மும்பையிலிருந்து கோவா மற்றும் பெங்களூரு வழியாக உடுமலைப்பேட்டைக்கு பயணித்துள்ளார். இதையடுத்து ரகுவை கைது செய்த சிப்காட் போலீசார், இந்த போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் மேலும் யார் யார் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பெங்களூரு சித்தாபுரா பகுதியில் உள்ள கிரீன்லேண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். அங்கு தங்கியிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த எக்ஸெல் (22) என்பவர், பெங்களூருவில் உள்ள ஜெயின் பல்கலைக்கழகத்தில் B.Sc. Medical Radiography 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே குடியிருப்பில் தங்கியிருந்த ஜெய்சன் (23) என்பவர், கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே நாகம்புதூரைச் சேர்ந்தவர், M.Com படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இருவரும் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்தபோது நண்பர்களாக பழகி வந்துள்ளார் அப்போது எக்ஸெல், ஜெய்சனிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்றுள்ளார். ஜெய்சனிடமிருந்து பெற்ற மூன்று வங்கிக் கணக்குகளை போதைப்பொருள் தொடர்பான பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்து வந்துள்ளார். இதையடுத்து சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன் தலைமையில், போலீசார் கார்த்திக், உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட குழுவினர் பெங்களூருவில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக பெங்களூர் சித்தாபுரா பகுதியில் உள்ள கிரீன்லேண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த எக்ஸெல் மற்றும் ஜெய்சன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து. அவர்களிடமிருந்து சுமார் 150 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் ஓசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இந்த போதைப் பொருள் கடத்தல் மற்றும் பணப் பரிவர்த்தனையில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு புழல் சிறையில் அடைக்க உள்ளார்கள்.