கர்நாடக யானைகள் முகாமில் சோகம்.. குடும்பம் கண் முன்னே சென்னை பெண் பலி; அமைச்சரின் அதிரடி உத்தரவு

  • ஓசூர்: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள பிரபல துபாரே யானைகள் முகாமில் நிகழ்ந்த துயர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குழந்தையுடன் சுற்றுலா சென்ற சென்னை பெண், யானைகள் திடீரென சண்டையிட்ட பரபரப்பில் ஆற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற 'துபாரே' யானைகள் முகாமில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த முகாமில் யானைகள் குளிப்பதைக் காண்பதற்கும், அவற்றுக்கு உணவளிப்பதற்கும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், சென்னையில் இருந்து தனது குடும்பத்தினருடன் 33 வயதான ஜின்ஷு என்ற பெண்மணி சுற்றுலா சென்றிருந்தார்.

    Advertisement

    முகாமில், யானைகள் நீராடிக்கொண்டிருந்தபோது, அவற்றுக்கு ஜின்ஷு உணவளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் எதிர்பாராத விதமாக திடீரென ஒன்றுடன் ஒன்று கடும் சண்டையில் ஈடுபட்டன. ஒரு யானை மற்றொன்றை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியதால், அந்தப் பகுதியே போர்க்களமாக மாறியது. இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர்.

    இந்த பரபரப்பிற்கு இடையே கடும் அச்சமடைந்த சென்னைப் பெண் ஜின்ஷு, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி ஆற்றிலுள்ள தண்ணீருக்குள் விழுந்தார். யானைகளின் சண்டை தீவிரமாக இருந்ததால், அவரை உடனடியாக மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அங்கிருந்த உள்ளூர் மக்கள் உடனடியாக ஆற்றில் இறங்கி, போராடி ஜின்ஷுவை மீட்டனர்.

    Advertisement

    பலத்த காயமடைந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக குஷால்நகர் காவல் துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானைகள் சண்டையிடும் இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கந்த்ரே அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். சுற்றுலாப் பயணிகள் யானைகளுக்கு நீராட்ட மட்டுமே இனி அனுமதிக்கப்பட வேண்டும். வெல்லம், வாழைப்பழம் போன்ற உணவுப் பொருட்களை யானைகளுக்கு வழங்குவதை உடனடியாக முறைப்படுத்த வேண்டும்.

    Advertisement

    முகாமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்குகளிடமிருந்து எப்போதும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். யானைகள் முகாமில் நிகழ்ந்த இந்த அசம்பாவிதம், சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    A tragic incident at the famous Dubare Elephant Camp in Karnataka’s Kodagu district claimed the life of a 33-year-old woman from Chennai. The woman reportedly fell into the river during panic caused by a sudden fight between two elephants. Despite rescue efforts, she died during treatment, leaving her husband and child in deep shock.