ஓசூர்: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட வலியுறுத்தியும், அதை எதிர்க்கும் தமிழக அரசை கண்டித்தும், கன்னட அமைப்புகள் கர்நாடகா மாநில எல்லையில் போராட்டம் நடத்திய நிலையில் வாட்டாள் நாகராஜ் உள்பட 50பேர் கைது செய்யப்பட்டனர்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது, அது போல் இந்த அணை கட்டுவது தமிழகம் மட்டுமில்லை கர்நாடகா விவசாயிகளுக்கும் பாதகத்தை தரும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.
மேகதாதுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி கர்நாடகா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் (பந்த்) நடத்துவதாக கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன. இந்த பந்த் போராட்டத்தின் முன்னோட்டமாக கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கர்நாடக- தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திலிருந்து கர்நாடகா மாநிலத்திற்கு வாகனங்கள் பயணிக்கும், தேசிய நெடுஞ்சாலையில் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மேலும் பலர் தமிழக எல்லையில் இருந்து பணி நிமித்தமாகவும் சொந்த அலுவல் காரணமாகவும், வியாபார ரீதியாகவும், மருத்துவச் சிகிச்சைக்காகவும் கர்நாடகா எல்லைக்குள் செல்ல வேண்டியிருந்தது. இவர்களின் போராட்டத்தால் அவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து வாட்டாள் நாகராஜ் உள்பட 50க்கும் மேற்ப்பட்டோரை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்த பிறகு, கர்நாடகா மாநிலத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. தமிழகத்தில் காவிரி விவகாரத்தில் போராட மாணவர்கள் தயாராக உள்ள நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு கர்நாடகா மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு அளித்து போராட வர வேண்டுமென வாட்டாள் நாகராஜ் தூண்டி விட்டுள்ளார்.