சாகும் போது இந்தியராக சாகணும்.. 94 வயதில் அமெரிக்க குடியுரிமையை தூக்கி எறிந்த ஆந்திர மூதாட்டி!

  • ஹைதராபாத்: அமெரிக்கா அல்லது கனடா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று குடியேறுவது என்பது இன்று பல இந்தியர்களுக்கு ஒரு பெருமிதமான விஷயமாகவும், சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இங்கு ஒருவர் 94 வயதில் தனது அமெரிக்க குடியுரிமையை துறந்துவிட்டு, மீண்டும் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

    Advertisement

    ஆந்திராவைச் சேர்ந்த 94 வயது மூதாட்டி கொண்டிரகுண்டா மகாலட்சுமம்மா. அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்த இவர், இப்போது அதைத் துறந்துள்ளார். என்ன தான் வெளிநாட்டில் இத்தனை ஆண்டுகள் இருந்தாலும் கூட உயிரிழக்கும்போது தனது சொந்த கிராமத்தில் ஒரு இந்தியராகவே உயிர் துறக்க விரும்புவதாகக் கூறி, இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

    Advertisement

    94 வயது மூதாட்டி

    ஆந்திர மாநிலம் சின்னகஞ்சாம் மண்டலத்தில் உள்ள சிந்தகும்பாலா கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமம்மா, தனது கணவர் நாகபூஷணம் காலமான பிறகு அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். அங்கு புற்றுநோய் மருத்துவ நிபுணரான தனது மகன் டாக்டர் கே. புகைய்யா சவுத்ரியுடன் வசித்து வந்த அவர், 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றார். அங்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, 2018ஆம் ஆண்டு தனது தாய்நாட்டிற்குத் திரும்பி, சொந்த கிராமத்திலேயே குடியேறினார்.

    இந்தியா திரும்பியதிலிருந்தே தனது சொந்த மண்ணிலேயே வாழ விரும்பிய மகாலட்சுமம்மா, அமெரிக்கக் குடியுரிமையைத் தானாக முன்வந்து துறந்தார். மேலும், மீண்டும் இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி இணையவழியில் விண்ணப்பித்தார். தற்போது அவர் வெளிநாட்டு இந்தியக் குடிமகன் (OCI) அந்தஸ்தையும் கொண்டுள்ளார். தனது வாழ்நாளின் இறுதி நாட்களை ஒரு இந்தியக் குடிமகளாகக் கழிக்க வேண்டும் என்பதும் தனது இறுதிச் சடங்குகள் தாய்நாட்டிலேயே நடக்க வேண்டும் என்பதும் அவரது விருப்பமாக இருந்தது.

    Advertisement

    உறுதிமொழி

    அவரது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மகாலட்சுமம்மா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது உறுதிமொழி ஏற்றார். வயது முதிர்வு காரணமாக அதிகாரிகள் அவருக்கு உதவினர். உறுதிமொழியை எடுக்க மகாலட்சும்மாவின் மகனும் அவருக்கு உதவினார். பின்னர், சட்டப்பூர்வ ஆவணங்களில் கையெழுத்திட்டார். இந்த நெகிழ்ச்சியான தருணம் அங்கிருந்த அனைவரையும் உணர்ச்சி வசப்படுத்தியது.

    உள்துறை அமைச்சகம்

    மாவட்ட ஆட்சியர் வினோத் குமார் இது குறித்து பேசுகையில், "அவரது பாசமும், தாய்நாட்டின் மீதான அவரது அளவற்ற பற்றும் அனைவரின் மனதையும் நெகிழச் செய்தது" என்றார். மகாலட்சுமம்மாவின் விண்ணப்பம் மற்றும் அவரது நேர்காணல் அறிக்கை தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியக் குடியுரிமை சட்டங்களின்படி அனைத்து நடவடிக்கைகளும் சரியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

    Advertisement

    இந்திய குடியுரிமை

    94 வயதில் அமெரிக்காவின் சொகுசான வாழ்க்கையைத் துறந்து, சொந்த கிராமத்துக்கு திரும்பி, இந்தியக் குடியுரிமைக்காக இவ்வளவு தூரம் முயற்சி எடுத்துள்ள மகாலட்சுமம்மாவின் செயல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் செல்வதையே லட்சியமாக கொண்டிருக்கும் நிலையில், மகாலட்சுமம்மா இந்திய குடியுரிமையைப் பெறத் தனது அமெரிக்கக் குடியுரிமையையே துறக்க முடிவு செய்துள்ளார்.

    இந்திய சட்டப்படி ஒருவரால் இரட்டை குடியுரிமையை வைத்திருக்க முடியாது. எனவே, இவர் அமெரிக்க குடியுரிமையைப் பெறும்போது இந்திய குடியுரிமையைத் துறந்திருப்பார். அதேபோல இப்போது இந்திய குடியுரிமையைப் பெற அவர் அமெரிக்கக் குடியுரிமையை துறக்க வேண்டி இருக்கும். அதை துறந்தே இப்போது குடியுரிமையை பெற்றுள்ளார்.

    English Summary

    94-year-old Kondiragunta Mahalakshmamma renounced her US citizenship to legally reclaim her Indian citizenship(அமெரிக்க குடியுரிமையை துறந்த இந்திய பெண்): Andhra Woman Renounces US Citizenship latest news in tamil.