ஆதாரம் தானே வேணும்? அரசாணையை வெளியிட்டு அமைச்சர் கீர்த்தனாவை அம்பலப்படுத்திய பாஜக!

  • ஹைதராபாத்: ஆந்திராவின் குப்பம் கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் மற்றும் கர்நாடகாவின் இரண்டாவது பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடர்பான அதிகாரப்பூர்வ திட்டங்களை சமூக வலைதள வதந்திகள் மட்டுமே என்று சட்டப்பேரவையில் தமிழக தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ அரசாணை ஆதாரங்களை வெளியிட்டு தமிழக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது.

    Advertisement

    தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அண்டை மாநிலங்களின் பிரம்மாண்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்த முறையான தகவல்களோ, ஆவண ஆதாரங்களோ கூட தெரியாமல் ஒரு மாநிலத்தின் தொழில் துறை அமைச்சர் பேசியிருப்பது மிகவும் கவலையளிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    Advertisement

    உண்மை நிலவரப்படி, ஆந்திரப் பிரதேச அரசு சித்தூர் மாவட்டம் குப்பத்தில் புதிய கிரீன்ஃபீல்ட் விமான நிலையத்தை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ பணிகளைத் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது. ஆந்திர விமான நிலையங்கள் மேம்பாட்டுக் கழகம் (APADCL), அமராவதி, ஸ்ரீகாகுளம் மற்றும் குப்பம் ஆகிய மூன்று இடங்களில் புதிய விமான நிலையங்களை அமைப்பதற்காகத் தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை (TEFR) தயாரித்து, முதற்கட்டமாக ரூ. 5,545 கோடி நிதியொதுக்கீட்டுடன் திட்ட முன்மொழிவுகளை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் (MoCA) ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது.

    குப்பம் விமான நிலையத்துக்காக சுமார் 1,250 ஏக்கர் நிலத்தைக் கண்டறிந்து, முதற்கட்டப் பணிகளை ஆந்திர அரசு தொடங்கியுள்ளது.

    Advertisement

    பாஜக பதிலடி

    இந்த நிலையில், அவருக்கு எதிராக அதிகாரப்பூர்வ அரசாணை ஆதாரங்களை வெளியிட்டு தமிழக பாஜக வீடியோ வெளியிட்டுள்ளது.

    அமைச்சர் கீர்த்தனாவின் கருத்துக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியான கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் விரிவான 'ரீல்ஸ்' (Reels) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், குப்பம் கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதற்கான அரசு ஆவணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

    குறிப்பாக, சித்தூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள அரசாணை அறிவிக்கையை பாஜக ஆதாரமாக முன்வைத்துள்ளது. கடந்த மார்ச் 13 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் எண் 75/2026 (Gazette No. 75/2026) உள்ளிட்ட அறிவிப்புகளில், ராமகுப்பம் மண்டலம் கடசினக்குப்பம் கிராமம், சாந்திபுரம் மண்டலம் அம்மவாரிபேட்டை மற்றும் தண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கிரீன்ஃபீல்ட் விமான நிலையக் கட்டுமானத்திற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படுவது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    எந்தெந்த சர்வே எண்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன, எந்தெந்த கிராமங்களுக்கு நில கையகப்படுத்தும் அறிவிப்புகள வெளியிடப்பட்டுள்ளன என்பது வரையிலான துல்லியமான தரவுகளை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் எல்லைக்கு மிக அருகில் அண்டை மாநில அரசு அதிகாரப்பூர்வ அரசிதழ் வெளியிட்டு நிலம் எடுக்கும் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், இது வெறும் சமூக வலைதள வதந்தி என்று பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததன் மூலம் ஒரு துறை அமைச்சராக அடிப்படைத் தரவுகள் கூட தெரியாமல் அவர் செயல்படுகிறார் என்பதை பாஜக இந்த பதிவின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளது.

    ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தமிழக தொழில் மண்டலங்களின் எதிர்காலம் அண்டை மாநிலங்களின் விமான நிலையத் திட்டங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதா என்ற கவலை தொழில்முனைவோரிடையே எழுந்துள்ள சூழலில், உண்மைகளை ஆராய்ந்து உரிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, முறையான ஆவணங்களையே நிராகரிக்கும் போக்கை மாற்றி தொழில் துறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

    English Summary

    BJP Counters TN Minister Keerthana with Official Gazettes on Kuppam Airport