சந்திரபாபு நாயுடு மிக்சர் சாப்பிட்டுட்டே.. பிசினஸ் எப்படி போகுதும்மா.. நாகமணிக்கு ஸ்பாட்டிலேயே அரசு ஆர்டர்

  • ஹைதராபாத்: விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியை ஆய்வு செய்ய நேரில் வந்தார் சந்திரபாபு நாயுடு... மீனவர்கள், துப்புரவு பணியாளர்கள், ஸ்கூபா டைவர்களிடம் பேசிய அவர், கடற்கரையில் இருந்த ஒரு சின்ன கடையையும் கவனித்தபடி நின்றார்.. அதற்கு பிறகு அந்த கடைக்கு சென்ற சந்திரபாபு நாயுடு என்ன செய்தார் தெரியுமா? இந்த செய்திதான் தற்போது அம்மாநிலத்தில் கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரையில் வழக்கம்போல் நேற்று கடைகள் இயங்கி கொண்டிருந்தன.. மறுபக்கம் கடலை சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. "ஸ்வர்ண ஆந்திரா-ஸ்வச்ச ஆந்திரா" திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்தப் பணிகளில், கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் பழைய மீன்பிடி வலைகளையும் அகற்றும் பணி நடக்கிறது. மொத்தம் 1200 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

    இந்தப் பணிகளை நேரில் ஆய்வு செய்வதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு திடீரென ஆர்.கே. கடற்கரைக்கு வந்து விட்டார். கடற்கரை மணலில் நடந்தபடியே தூய்மைப் பணிகளை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு, இதில் ஈடுபட்டிருக்கும் துப்புரவு பணியாளர்கள், மீனவர்கள் மற்றும் ஸ்கூபா டைவர்களிடம் கேஷூவலாக பேசினார்... கடலுக்கு அடியில் கிடக்கும் கழிவுகளை எப்படி கண்டுபிடித்து அகற்றுகிறார்கள் என்பது குறித்தும் டைவர்களிடம் கேட்டறிந்தார்.

    கடலில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொண்டு வரும் மீனவர்களுக்கு, சேகரித்த கழிவுகளை டிஜிட்டல் முறையில் எடை போட்டு உடனடியாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கடலை சுத்தப்படுத்தும் பணியுடன், மீனவர்களுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது.

    Advertisement

    நாகமணி தந்த மூரி மிக்சர்

    இப்படி கடற்கரையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தபோதுதான், அங்கு மூரிமிக்சர் விற்றுக் கொண்டிருந்த ஒரு அட்டாடா நாகமணி என்ற பெண், சந்திரபாபு நாயுடுவின் கவனத்தை ஈர்த்தார்... உடனடியாக அந்த கடைக்கும் வந்து, மூரி மிக்சரை வாங்கி சாப்பிட்டார்..

    மூரி என்றால் பொரி என்று அர்த்தம்.. பொரியுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, வேர்க்கடலை, கொத்தமல்லி, மாங்காய் துண்டுகள், எலுமிச்சை சாறு மற்றும் காரமான மசாலா பொடிகள் சேர்த்து புதிதாக உடனடியாக கலந்து பேப்பரில் மடித்துத் தருவார்கள்.. இதைத்தான் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டார் நாயுடு.. முதல்வரே தனது கடையில் வந்து மிக்சர் வாங்கி சாப்பிட்டதை பார்த்த அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியடைந்தார்.

    Advertisement

    பிசினஸ் எப்படி போகுது

    ஆனால், அத்துடன் அந்த சந்திப்பு முடிந்துவிடவில்லை.. "எப்படி போகுது பிசினஸ்?" என்று கேட்க ஆரம்பித்து, அந்தப் பெண்ணிடம் அவரது குடும்பம், வருமானம் உள்ளிட்ட விவரங்களை சந்திரபாபு நாயுடு கேட்டார். அதற்கு நாகமணி, கணவரைப் பிரிந்து ஆதரவின்றி வாழ்வதாகவும், தனது பிழைப்புக்காக இந்தச் சிறு தொழிலை நடத்தி வருவதாகவும் சொன்னார்..

    இதைக்கேட்ட சந்திரபாபு நாயுடு, கொஞ்சமும் தாமதிக்கவில்லை. உடனடியாக அருகில் நின்றிருந்த அதிகாரிகளை அழைத்து, நாகமணிக்கு உடனடியாக அரசு ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்று ஸ்பாட்டிலேயே அதிரடி ஆணை பிறப்பித்தார். எதிர்பாராத இந்த உதவியால் அந்தப் பெண் ஆனந்தக் கண்ணீரில் நனைந்தார்.. உடனே முதல்வருடன் போட்டோவும் எடுத்துக்கொண்டார்... ஒரு சிறிய முரிமிக்சர் கடையில் நடந்த இந்த சந்திப்பு எதிர்பாராத கவனத்தை பெற்று, நெகிழ வைத்துள்ளது...!!!

    English Summary

    Chandrababu Naidu Eats Muri Mixture.. “How’s Business?”.. On-the-Spot Government Order for Nagamani