சின்ன ஸ்டூலை நகர்த்தி விஜய் செய்த காரியம்.. சந்திரபாபு நாயுடு இன்ப அதிர்ச்சி! தமிழகத்துக்கு லாபம்?

  • ஹைதராபாத்: தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஆந்திரப் பயணம் அரசியல் காரணங்களுக்காக மட்டுமல்லாமல், அங்கு அவருக்கு கிடைத்த வரவேற்பு, கனகதுர்கா அம்மன் கோயிலில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம், தெலுங்கில் அவர் பேசிய விதம் எனப் பல விஷயங்களால் கவனம் பெற்றுள்ளது.. குறிப்பாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்த விஜய், தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் குறித்தும் முக்கியமாகப் பேசியிருக்கிறார்..

    Advertisement

    விமான நிலையத்திலிருந்து விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா அம்மன் கோயிலுக்குச் சென்ற விஜய்க்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..

    Advertisement

    விஜய் ஆந்திரா பயணம்

    தமிழகத்தைச் சேர்ந்த முதல்வர் ஒருவர் ஆந்திராவுக்குச் சென்றபோது, அவரைப் பார்க்க மக்கள் திரண்டதும், ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரமும் கவனத்தை ஈர்த்தன.. அந்த வரவேற்பை பார்த்தால், ஒரு நிமிஷம் இது ஆந்திராவா, தமிழ்நாடா என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு உற்சாகம் இருந்தது.. அதுமட்டுமல்ல, விஜய் கார் எங்கு சென்றாலும், அதற்கு பின்னாடியே ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் ஓடி வந்துள்ளார்கள். காருக்குள்ளிருந்த விஜய்க்கு கேட்கும் அளவுக்கு, அவர்கள் உற்சாகத்துடன் பெயரிட்டு அழைத்தார்களாம்.

    கோயிலுக்குப் பாரம்பரிய உடையில் சென்ற விஜய்க்கு அர்ச்சகர்களும் கோயில் அதிகாரிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.. வரிசையில் நின்றிருந்த பக்தர்களுக்கு வணக்கம் தெரிவித்தபடியே சென்ற அவர், கருவறையில் உள்ள அம்மனைத் தரிசனம் செய்தார். அவருக்கு அம்மனின் திருவுருவப் படமும் புனிதப் பொருட்களும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன..

    Advertisement

    சின்ன ஸ்டூலை நகர்த்திட்டு

    இதனிடையே, கோயிலில் நடந்த இன்னொரு விஷயமும் கவனம் பெற்றுள்ளது.. வேத அறிஞர்கள் ஆசீர்வாதம் வழங்கியபோது, தனக்காக வைக்கப்பட்டிருந்த சின்ன ஸ்டூலை விஜய் நகர்த்திவிட்டு, தரையில் உட்கார்ந்து விட்டாராம் விஜய்.. அவரது கோயில் பயணத்தில் இந்த எளிமையான சம்பவமும் பேசப்படும் விஷயமாகியுள்ளது..

    சாமி தரிசனம் முடிந்ததும், அமராவதியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குச் சென்றார் விஜய்.. அங்கு சந்திரபாபு நாயுடுவும் அவரது மகனும் வாசல் வரை ஓடிவந்து விஜய்யை வரவேற்றனர். தொடர்ந்து, ஆந்திர அமைச்சர்களான நிம்மலா ராமநாயுடு, நாராயணா உள்ளிட்டோரை விஜய்க்கு சந்திரபாபு நாயுடு அறிமுகப்படுத்தி வைத்தார்..

    Advertisement

    சந்திரபாபு நாயுடு விருந்தோம்பல்

    இந்தச் சந்திப்பில் தமிழகத்துக்குப் பயனளிக்கக்கூடிய 2 முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன.. ஒன்று, கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்புத் திட்டம். மற்றொன்று, சென்னைக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடுவது. ஆந்திராவில் அளிக்கப்பட்ட விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்த விஜய், இரு மாநிலங்களுக்கும் பொதுவான நலன் சார்ந்த விஷயங்களில் ஒத்துழைப்பு அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்..

    இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு பிரதமர் மோடியிடம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.. அதாவது, இந்த திட்டம் குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் பேசுவதற்கு முன்பே, மத்திய அரசின் கவனத்துக்கும் இந்தக் கோரிக்கையைக் கொண்டு சென்றிருக்கிறார்..

    Advertisement

    தெலுங்கில் வாழ்த்திய விஜய்

    பிறகு, விஜயவாடா உத்சவ் 2.0 நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடுவுடன் விஜய் பங்கேற்றார்.. அங்கு தனது உரையை "Andariki namaskaram" என்று தெலுங்கில் தொடங்கிய அவர், அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்தார். "விஜயவாடாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி, எனக்கு அன்பு காட்டிய மக்களுக்கு நன்றி" என்று விஜய் தெலுங்கில் பேசியதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..

    எனினும், சந்திரபாபு நாயுடுவுடனான இநத் சந்திப்பால் தமிழகத்துக்கு குறிப்பாக சென்னைக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்குமா? சென்னையின் 5 குடிநீர்த் தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் இப்போது சுமார் 35% மட்டுமே இருப்பதாக விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.

    Advertisement

    தமிழகத்துக்கு லாபமா

    நடப்பு நீர் ஆண்டில் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை திறந்துவிடும்படியும் சந்திரபாபு நாயுடுவிடம் கேட்டிருக்கிறார்.. ஆந்திர அரசு கூடுதல் தண்ணீரைத் திறந்துவிட்டால், அது சென்னையின் குடிநீர்த் தேவைக்கு உதவக்கூடும். ஆனால், கோரிக்கை வைக்கப்பட்டுவிட்டது என்பதற்காக தண்ணீர் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று சொல்ல முடியாது. ஆந்திராவின் ஒப்புதல், தண்ணீர் இருப்பு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கும்..

    அதேபோல், கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம் தமிழகத்துக்கு நீண்டகாலத்தில் பலன் தரக்கூடிய திட்டமாக இருக்கலாம்.. ஆனால், திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாநிலங்களுக்கிடையேயான ஒப்புதல், தண்ணீர் பங்கீடு, நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தீர்க்கப்பட வேண்டும். எனவே விஜய் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு இரு மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க உதவுமா என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக கிளம்பியுள்ளது...!!!

    English Summary

    Chandrababu Naidu Surprise for Vijay.. Temple Gesture Stuns, Will Tamil Nadu Get a Water Benefit?