வேலூரில் திடீர் கொரோனா மரணம்.. ஆந்திராவில் 8 பேருக்கு சிகிச்சை.. மீண்டும் மிரட்டும் கோவிட் பாதிப்பு!

  • ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவத் தொடங்கியுள்ளதால் அங்கு ஹை அலர்ட் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களில் மட்டும் எட்டு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    கடந்த 2019ல் கொரோனா பரவ ஆரம்பித்து உலகையே ஒட்டுமொத்தமாக உலுக்கிப்போட்டது. அந்த கொரோனா பாதிப்பில் இருந்து நாம் மீண்டு வரவே நமக்கு சில ஆண்டுகள் வரை ஆனது. இப்போது தான் சில ஆண்டுகளாகப் பெரியளவில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே மீண்டும் கொரோனா பாதிப்பு பரவ ஆரம்பித்துள்ளது.

    Advertisement

    வேலூரில் உயிரிழப்பு

    கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

    மற்றொரு சம்பவத்தில், உடல்நலக்குறைவு காரணமாக கடப்பா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயது நபருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதற்கிடையில் கடப்பா மருத்துவக் கல்லூரியில் பயிலும் 25 வயது மருத்துவ மாணவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    Advertisement

    சோதனை

    கடப்பா மாவட்டத்தில் புதிய கொரோனா பாதிப்புகள் திடீரென பதிவானதை தொடர்ந்து, அங்கு சுகாதாரத் துறையின் சிறப்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் சுமார் 40 பேரிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதில் 18 பேருக்கு கொரோனா இல்லை என்பது தற்போது வரை உறுதியாகியுள்ளது. மற்றவர்களுக்கு டெஸ்ட் ரிசல்ட் இதுவரை வரவில்லை.

    இப்போது கடப்பா மாவட்டத்தில் 8 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போது எந்த வகை கொரோனா பரவுகிறது என்பதை கண்டறிந்து, அதன் தன்மையை ஆய்வு செய்ய மாதிரிகள் புனேயில் மரபணு வரிசைப்படுத்தும் (Genome Sequencing) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

    Advertisement

    அமைச்சர் உத்தரவு

    கடப்பா மாவட்டத்தில் கொரோனா தொற்று மேலும் பரவுவதை தடுக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் சவிதா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுகாதார அதிகாரி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் சவிதா, கோவிட் தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கொரோனா வழிகாட்டுதல்களை கடுமையாக அமல்படுத்தவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார்.

    மேலும், மருத்துவமனைகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக கண்டறிந்து, தேவையானவர்களை தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தினார். கொரோனா எளிதாக காற்றின் மூலம் பரவும் என்பதால் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சவிதா உத்தரவிட்டுள்ளார்.

    Advertisement

    கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தீவிர பாதிப்பு இருப்போர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லேசான பாதிப்பு இருப்போர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டாலே போதும்.

    முன்னெச்சரிக்கை

    கடப்பாவில் ஏற்பட்டுள்ள இந்த புதிய பாதிப்புகளைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேசம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு, பரிசோதனை, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தல் வார்டுகள், போதிய படுக்கைகள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அதே நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். சோப்பு போட்டு கை கழுவுவது போன்ற சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிவது மற்றும் கொரோனா போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது போன்ற விஷயங்களைச் செய்தாலே போதும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    English Summary

    Andhra Pradesh health authorities have intensified surveillance after two Covid-19 deaths(ஆந்திராவில் பரவும் கொரோனா பாதிப்பு): Corona virus in Andhra latest news in tamil.