ஹைதராபாத்: வழக்கமாக தெலுங்கானா மாநிலத்தில் இந்த நேரத்தில் பருவமழை தீவிரமடைந்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் மழை இல்லாத சூழலே இருக்கிறது. இதன் காரணமாக மாநிலத்தில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எல் நினோ பாதிப்பால் மழை குறைந்துள்ள நிலையில், சுமார் 92% கிராமங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு நாடு முழுக்க எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை, ஒரு காட்டு காட்டும். ஆனால், இந்தாண்டு பல மாநிலங்களில் போதிய மழை இல்லை. ஜூன் 2வது வாரத்திற்கு பிறகே மழை தொடங்கிய நிலையில், அதுவும் கூட நீடிக்கவில்லை. இதற்கு எல் நினோ காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
அதன்படி தெலுங்கானாவிலும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. அங்கு எல் நினோ தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 92%க்கு அதிகமான கிராமங்கள் போதிய மழை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. இதனால் விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்த 12,760 கிராமங்கள் இருக்கும் சூழலில், அதில் 11,479 கிராமங்கள் போதிய மழை இல்லாமல் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. அங்குள்ள 29 மாவட்டங்களில் 892 கிராமங்கள் கடுமையான பாதிப்பையும், 7,939 கிராமங்கள் அதிக பாதிப்பையும், 2,998 கிராமங்கள் மிதமான பாதிப்பையும் எதிர்கொண்டு வருகின்றன. இந்த மழை காலத்தில் மொத்தம் 1.32 கோடி ஏக்கர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை 59.83 லட்சம் ஏக்கரில் மட்டுமே விதைப்பு பணிகள் முடிந்துள்ளன. அதாவது மொத்த டார்கெட்டில் 45.20 சதவீதம் மட்டுமே விவசாயம் நடந்துள்ளது.. இன்னும் 72.54 லட்சம் ஏக்கர் பரப்பில் விதைப்பு கூட நடக்காமல் இருக்கிறது. தெலுங்கானாவை பொறுத்தவரை அங்குள்ள விவசாய நிலங்களில் சுமார் 60 சதவீதம் மழையை நம்பியே உள்ளன. மீதமுள்ள 40 சதவீதம் மட்டுமே பாசன வசதிகளை சார்ந்துள்ளன. இதனால் மழை குறைந்தால் அங்கு சாகுபடி குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. பருத்தி, நெல், சோளம், சோயாபீன் மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட முக்கிய பயிர்களின் சாகுபடி குறையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மழை இல்லாததால் சில இடங்களில் 2வது முறையும் கூட விதைப்பு மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்கள்.. மழை இல்லை சரி ஓகே.. நீர்நிலையில் இருக்கும் தண்ணீரை வைத்து விவசாயம் செய்யலாம் என பார்த்தால் அங்கும் நிலைமை மோசமாகவே இருக்கிறது. பல நீர்நிலைகளில் தண்ணீர் குறைவாகவே உள்ளது. குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் ஓடைகள் வழக்கத்தை விட சீக்கிரம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. மழை குறைந்து இருப்பது விவசாயத்தை தாண்டி கிராமப்புற பொருளாதாரத்தையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறையக்கூடும். விவசாயிகளின் உற்பத்திச் செலவுகள் அதிகரித்து கடன் சுமை உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வு அதிகரிக்கக்கூடும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.92% பாதிப்பு
எச்சரிக்கை
நிலைமை என்ன!
கிராமப்புற பொருளாதாரமே பாதிக்கும்