கிச்சனில் கரப்பான் பூச்சி, மாவில் பூச்சி.. பிரபல உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி ரெய்டு!

  • ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருக்கும் முக்கிய உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல புகழ்பெற்ற உணவகங்களில் கிச்சன் மோசமான நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், ஈக்கள், கரப்பான் பூச்சிகள் இருந்ததையும் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக உணவகங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    ஹைதராபாத் என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது பிரியாணி தான். அங்குள்ள பிரியாணியின் டேஸ்ட்டே தனி. அங்கு ஒரு ஏரியாவுக்கு பல பிரியாணி கடைகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கூட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கிடையே ஹைதராபாத் சைபராபாத் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு சோதனைகளில், பல முக்கிய உணவகங்களில் கடுமையான சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

    Advertisement

    கரப்பான் பூச்சிகள்

    கிச்சனில் இறந்த கரப்பான் பூச்சிகள், திறந்தவெளி வடிகால்கள், மோசமான கழிவு மேலாண்மை எனக் கேட்டாலே தலை சுற்ற வைக்கும் அளவுக்குச் சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோ மற்றும் தகவல்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சமூக வலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டுள்ளனர்.

    ஹைதராபாத்தில் புகழ்பெற்ற ஷா கவுஸ் உணவகத்தில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சிலர் முறையான வழிகாட்டுதலைப் பின்பற்றுவதை உறுதி செய்தனர். இருப்பினும், கிச்சனின் நிலைமை மோசமாகவே இருந்துள்ளது.. சமையலறை முழுவதும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது. மேலும், எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் தூசி என்று கிச்சன் மோசமான நிலையிலேயே இருந்தது தெரிய வந்தது.

    Advertisement

    சுத்தமே இல்லை

    இறைச்சி வெட்டும் இடமும் கூட தூய்மையற்ற முறையில் இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதனால் உணவுப் பொருட்கள் ஒன்றோடொன்று கலந்து தொற்று ஏற்படும் அபாயம் இருந்தது. பாத்திரங்களைக் கழுவும் பகுதி தூய்மையற்று இருந்ததையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அங்கிருந்த சில உணவு பாக்கெட்களில் எக்ஸ்பைரி தேதிகள் ஒட்டப்படவில்லையாம். குடிநீர் தரம் குறித்த ரிப்போர்ட்டும் இல்லை. சமையலறைச் சுவர்களில் குட்கா கறைகளும் படிந்திருந்தன. இதனால் 92 புள்ளிகளுக்கு 60 புள்ளிகள் மட்டுமே (65 விழுக்காடு) வழங்கியுள்ளனர். பிரச்சினைகளைச் சரி செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    ஆவணங்கள் இல்லை

    ஹைதராபாத்தில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற உணவகமான மெஹ்பில் ஹோட்டலின் ஹைடெக் சிட்டி கிளையிலும் சோதனை நடத்தியுள்ளனர். அதில் கிச்சன் பகுதி மிகவும் குறுகலாகவும், தரைகள் ஈரமாகவும் இருப்பதை கண்டறிந்தனர். மேலும், உணவுகள் சரியான முறையில் சேமிக்கப்படவில்லை. குறிப்பாக, கட்டிடப் பணிகள் நடந்து வந்த பகுதியிலேயே ருமாலி ரொட்டி தயாரிக்கப்பட்டு வந்ததைக் கண்டறிந்த அதிகாரிகள், அதை உடனடியாக தடுத்து நிறுத்தினர். மேலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான மருத்துவத் தகுதி சான்றிதழ்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    Advertisement

    மாதாபூரில் உள்ள ஐடியல் கிச்சன் உணவகத்தை ஆய்வு செய்தபோதும் பல குறைபாடுகளைக் கண்டறிந்தனர். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மாவில் இறந்த கரப்பான் பூச்சிகளும், உளுந்தம் பருப்பில் வண்டுகளும் கிடந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சமையல் பொருட்களை நேரடியாகத் தரையில் வைத்துள்ளனர். ஊழியர்களின் மருத்துவத் தகுதி மற்றும் தண்ணீர் தரப் பரிசோதனை ஆவணங்களும் இல்லை.

    பழைய சாதம்

    அதேபோல பிரபலமான பார்பிக்யூ நேஷன் உணவகத்தில் பல முக்கிய ஆவணங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை. காய்கறி கூடைகள் மற்றும் தண்ணீர் கேன்கள் மிகவும் அழுக்காக இருந்ததால், அவற்றை உடனடியாக மாற்ற உத்தரவிடப்பட்டது. சேமிப்பு ரூமில் கரப்பான் பூச்சிகள் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். சைனீஸ் வோக் என்ற ஹோட்டலில் சமைத்த சாதம் 36 மணி நேரம் வரை பயன்படுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. பல சான்றிதழ்களும் இல்லையாம். சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முட்டைகள் சுத்தம் செய்யப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது.

    Advertisement

    இந்த ஹோட்டல்கள் என இல்லை.. அங்குள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியாக பல்வேறு ஹோட்டல்களில் இதுபோல அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். உணவுகளின் தரத்தில் எந்தவொரு சமரசமும் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் அதிகாரிகள் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். இதற்கு நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

    English Summary

    Food safety officials uncovered serious hygiene violations at three Hyderabad restaurants, including dead cockroaches(ஹைதராபத்தில் மிக மோசமாக உணவுகள் தரம்): Food Safety Raids at Hyderabad Restaurants latest news in tamil.